Skip to main content

ஆராதித்த அழகு தேவதையை அள்ளி அணைத்த மரணம்

வசந்தகால மலர்களின் மென்மையில் வார்த்தெடுக்கப்பட்ட வடிவம்... அதன் அழகியலை ஆராதித்துக் கொண்ட குணம்... அரச குடும்பத்தில் இருந்தாலும், அன்றாடக்காய்ச்சிகளின் அவலத்தையும் அறிந்துகொண்ட இளகிய மனம்... பொது வாழ்க்கையின் வெளிச்சத்தால் இருண்டுபோன எதிர்காலம்... இவற்றின் மொத்த பெயர்தான் டயானா (Diana Frances Spencer)...

இங்கிலாந்தில் Norfolk-ல் Sandringham பிறந்த டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றார்... டயானாவுக்கு எட்டு வயது இருக்கும்போது அவரின் பெற்றோர் பிரிந்து விட்டனர்... தாயிடம் வளர்ந்தார் டயானா... கல்லூரி படிப்பிலும் டயானா பெரிதாக பிரகாசிக்கவில்லை... இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறந்த பியானோ கலைஞராக உருவானார்... லண்டனில் சில காலம் ஒரு குடும்பத்துக்கு செவிலித்தாயாக பணியாற்றினார் டயானா... டயானாவின் மூத்த சகோதரி சாராவுடன், வேல்ஸ் இளவரசர் சார்லஸுக்கு நட்பு இருந்தது... 1981-ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் தன் காதலை டயானாவிடம் கூற, அவரும் அதை ஏற்றுக்கொண்டார்... இருவருக்கும் அதே ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது... 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது... வேல்ஸ் இளவரசியானார் டயானா... அறுபது லட்சம் மக்கள் இத்திருமணத்தை நேரடியாக தரிசித்தனர்... 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி ஊடாக திருமணத்தில் கலந்து கொண்டனர்... 25 அடி நீளமுள்ள ஒன்பது ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள உடையை டயானா அணிந்துவர, தேவலாயத்துக்குள் ஒரு தேவதை வருவதுபோல், அந்தக் காட்சி அமைந்தது... 

அரச குடும்பத்தை சேராத ஒருவர், பக்கிங்காம் அரண்மனைக்குள் வந்து, பல சீர்திருத்தங்கள் செய்தார்... உறவுகளுக்குள் நெருடல்... உணர்வுகளை புரிந்து கொள்வதில் சிக்கல்... அதன்தொடர்ச்சியாகி மணமுறிவு.. 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பாரீசில் பயணம் செய்த அவரது கார் விபத்துக்குள்ளானது... டயானா என்ற எழில் தேவதை தன் வாழ்வை மரணத்திடம் ஒப்படைத்தது... 

ஆகஸ்ட் 31... ஆர்ப்பரித்து கொட்டிய அருவி ஒன்று அடங்கிப்போனது... வசந்தகாலம் தன் ஆடையை களைந்து இலையுதிர் காலத்திற்கு இடம் மாறியது... ஊடகங்களின் விளம்பரப் பசிக்‍கு, அரண்மனைக்‍ கிளியின் உயிர் விருந்தாகப் பரிமாறப்பட்டது... படுக்‍கை அறையை சாவி துவாரம் வழியாக பார்க்‍கும் படுபாதகர்களைப் போல, ஆழ்மனதின் அந்தரங்கங்களைக்‍கூட அறியத் துடிக்‍கும் ஊடகங்களின் கோரமான உண்மை முகம், டயானாவின் மரணத்தில் வெளிச்சத்திற்கு வந்தது...

குடிசையில் பிறந்தாலும் சரி... கோபுரத்தில் குடியிருந்தாலும் சரி... பெண் என்பவள், தான் அனுபவிக்‍க வேண்டிய அத்தனை துன்பங்களையும் அனுபவித்தே தீரவேண்டும் என்பது யார் வகுத்த விதி?... இந்த விதிக்‍கு டயானா என்ற பெண்ணும் விதிவிலக்‍கல்ல... காரணம், சமூகத்தின் முதல் ஒடுக்‍குமுறையே பெண்தானே!... 

பாமரர்கள் வசித்த சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, பக்‍கிங்ஹாம் அரண்மனையில் திருமண வாழ்வைத் தொடங்கி, பரிதாபகரமான விபத்தில் மரணத்தை தழுவி, அகிலம் முழுவதும் உள்ள மக்களின் நினைவுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் டயானா என்ற இளவரசி... 

(இளவரசி டயானா நினைவு நாள் (ஆகஸ்ட் 31, 1997) இன்று...)