Skip to main content

மூன்றாம் பிறை திரைப்படம் வெளியாகி இன்றோடு 40 ஆண்டு நிறைவு!!

தமிழ் சினிமாவின், மிகச் சிறந்த, 25 படங்களில், பாலுமகேந்திராவின், மூன்றாம் பிறைக்கு நிச்சயம் இடம் உண்டு. மனமுதிர்ச்சி அடைந்த அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையும் தான், படம்.

சீனுவாக, கமலும்; விஜியாக, ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அவர்களுடன் நடித்த, 'சுப்பிரமணி' எனும் நாயும் கூட, நம் அன்பை பெற்றிருக்கும். ஊட்டி அருகே உள்ள, கெட்டி எனுமிடத்தில் தான், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பாலுமகேந்திராவின் கேமராவில் மட்டும், ஊட்டி இன்னும் அழகாகத் தெரியும்.சிறந்த நடிகர் விருது, கமலுக்கும்; ஒளிப்பதிவாளர் விருது, பாலுமகேந்திராவிற்கும் கிடைத்தன. ஆனால், சிறந்த நடிகை விருது, ஸ்ரீதேவிக்கு வழக்கப்படவில்லை; இது, பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியது!

வணிகத்திற்காக, இப்படத்தில் சேர்க்கப்பட்ட, 'பொன்மேனி உருகுதே...' பாடல் மட்டும், திருஷ்டி பொட்டு! இப்படம், 330 நாட்கள் மேல் ஓடி, பெரும் வெற்றியைப் பெற்றது. வசந்த கோகிலா எனும் பெயரில், தெலுங்கில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 1983ல், பாலுமகேந்திராவே, கமல், ஸ்ரீதேவி நடிப்பில், சந்த்மா என்ற தலைப்பில், ஹிந்தியில் இயக்கினார்.

கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய, கடைசி திரைப்படம் இது. அவரின், 'கண்ணே கலைமானே...' பாடலை, கேட்காத செவிகள், தமிழகத்தில் இல்லை; கேட்காதவை, செவிகளே இல்லை! உயிரில்லா இசைக்கருவிகள் வாயிலாக, உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியிருந்தார், இளையராஜா.

'கிளைமேக்ஸ்' முடிந்த பின்னும், பலர் திரையரங்கில் இருந்து வெளியேறாமல், கனத்த மனதுடன், இருக்கையில் அமர்ந்திருந்தனர். அங்கு நிமிர்ந்து நின்றார், பாலுமகேந்திரா!(கட்டிங் கண்ணையா)

ஒரு முறை பாலு மகேந்திராவிடம் பேசிக் கொண்டிருந்த போது "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.- அப்படீன்னு சொன்னது நினைவில் இருக்குது