"சின்ன பட்ஜெட்டுக்கு நடிக்க வராத பிரபல நடிகர்கள்" - இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேச்சு

சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் EMI.
ஏப்ரலில் திரைக்கு வரவுள்ள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினருடன் திரைத்துறை பிரபலங்களும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சதாசிவம் சின்னராஜ், "EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது. ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை. கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோதுதான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன்.
முதல்முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன். இப்போது வரை அவர் படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்துவருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்துதான் தயாரிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் மல்லையன், நீ ஏன் எல்லோருக்கும் பதில் சொல்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்றார். என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி.
இந்தப் படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள். அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான் முதலில் நடிப்பதாக இல்லை. எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் தான் நானே நடித்துவிடலாம் என இறங்கிவிட்டேன்" என்றார்.