Skip to main content

எம். என். நம்பியார் மறைந்த தினமின்று

ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.

 அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்த நம்பியார்

 இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

 தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

 கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

 கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில்  பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை  ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.


இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!

2008-ம் ஆண்டு இதே நவம்பர் 19-ம் தேதி  உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி.