முருகன் மாநாட்டில் பங்கேற்க ஆகஸ்ட் 15 வரை பதிவு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க ஆகஸ்ட் 15 வரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் சேகர்பாபு தகவல் சென்னை,
ஜூலை 17: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் ஜூலை 15ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் ஜூலை 10ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள்
பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2024 ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.