மருமகளும் நாத்தனாரும்… - மு.பழனிவாசன்

ஆங்கிலத்தில் இரத்த பந்தமான உறவுமுறைகளை அழைக்க, “கிராண்ட் மா, கிராண்ட் பா, ஃபாதர், மதர், பிரதர், சிஸ்டர், அங்கிள், ஆண்ட்டி”என்பவை மட்டுமே இன்றுவரை பிரதானம்.
தமிழ்மொழி அப்படியல்ல. இது செழுமையான சொற்களை தொகுப்புகளாகக் கொண்டுள்ளது. எப்படி?
தந்தையின் தகப்பன்;தாய் “பாட்டன் – பாட்டி,
தாயின் தகப்பன்: தாய் “தாத்தா- பாட்டி”
தகப்பனின் உடன்பிறந்தோர் பெரியப்பா, சித்தப்பா . அவர்களின் வம்சாவழியினர் உடன் பங்காளிகள். பெண்ணென்றால் “அத்தை”
தாயின் உடன்பிறந்தோர் பெரியம்மா, சித்தி, ஆணென்றால் தாய்மாமன்.
இப்படி ஒவ்வொரு உறவுகளைக் குறிப்பிட எத்தனையோ சொற்கள் மற்றும் சிலவற்றிற்கு மாற்றுச் சொற்களும் உண்டு. அவ்வகையில் நம் பாரத கலாச்சாரத்தில் ஒவ்வொரு உறவுப்பெயர்களுக்கும் பொருள் பொதிந்த தனித்துவமான சொற்கள் உண்டு.
சரி… ”மருமகள் – நாத்தனார்” இவற்றிற்கான பொருள்?
மருமகள்:
பிறர் வீட்டில் ஒரு தாய்தகப்பனுக்கு மகளாகப்பிறந்து வளர்ந்தவள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கே அவள் தன் கணவனின் தாய் தகப்பனுக்கு தன் அன்பால், சேவையால், அவர்கள் அவளை சீராட்டும் விதத்தால் அவர்களுக்கு மகளாகிறாள். இப்படி மறுபடியும் மகளாவதால், அவள் அவ்வீட்டில் “மருமகள்”.
நாத்தனார்:
ஒரு பெண் திருமணமாகி ஒரு குடும்பத்தின் மருமகளாக தன் கணவன் வீட்டிற்குச் (புகுந்த வீடு) செல்கிறாள். அங்கு அவள் கணவனுக்கு உடன் பிறந்த சகோதரி ஒருவள் இருக்கிறாளென வைத்துக்கொள்வோம். அந்தப்பெண் புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு “நாத்தனார்” ஆவார்.
அது என்ன நாத்தனார்?
விவசாயத்தில் நெற்பயிரைப் வளர்த்தெடுக்க முதலில் விதைநெல் தூவப்படுகிறது. அது நீரின் உதவியால் ஒவ்வொரு விதை நெல்லிலிருந்தும் பசுமையாக முளைத்து சிறுபுல் போன்ற அளவிற்கு வளர்கின்றது. அதன் பெயரே “நாற்று”. சரி… நாம் அந்த நாற்றை அப்பபடியேவா நாம் வளர விடுகிறோம்? அந்த நாற்றினை அருகாமையில் உள்ள பண்படுத்தப்பட்ட ஒரு வயலில் ஒவ்வொரு நாற்றையும் தனித்தனியாக நடுகிறோம். அப்போதுதான் அவை தனித்தனியே நன்கு செழித்து வளர்ந்து, நிறைந்த நெல்மணிகளைத்த தந்து தழைக்கும்.
இதையே குடும்பத்தின் ஒவ்வொரு பெண்பிள்ளைகளுடன் உருவகப்படுத்தி, ஒருவர் வீட்டிலும் நாற்றுபோல் மகளாகப்பிறந்து, புகுந்த வீட்டில் “மருமகளாக நடப்பட்டு, அக்குலம் செழிக்க மேலோங்கி வாழ்பவளை “நாற்று + ஆனார்” என்கிற பொருளில் நாற்றானார் = நாத்தனார் என மருவி “நாத்தனார்” என்றழைக்கப்டுகிறார்கள்.