"பெண்களின் போர்வாள்" டாக்டர் முத்து லட்சுமி அம்மையார்

”அரசியலில் மகளிருக்கு 33 % சதவீத ஒதுக்கீடு” என்பது தேர்தல் காலத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளாலும் அளிக்கப்படும் வாக்குறுதி. ஆயினும் இன்னும் அது கனவாகவே இருந்து வருகிறது.
இந்த நவீன காலத்திலும் நிலைமை இப்படியிருக்க, பிறகெப்படி பெண் சமுதாயம் பல தடைகளைக்கடந்து முன்னேறியது?
”ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்” என்பர். இங்கே, பெண்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணே இருந்திருக்கிறார். அவர்தான் டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார் அவர்கள்.
பாரதி பாடிய ”பெண் விடுதலை” என்னும் பெரும் முழக்கத்திற்கு செயல்வடிவம் தந்தவர் டாக்டர். முத்துலெட்சுமி அவர்கள்.
ஆம்… புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவான் குடும்பத்தில் பிறந்து, பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் , இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
பெண்களை இழிவுபடுத்திய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், , விபச்சார ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தும் சட்டம் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான தடைகளை தகர்த்தெறிந்து, அவர்தம் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் டாக்டர்.முத்துலெட்சுமி அம்மையார். ஆனால், இப்படிப் பட்டவரின் பெருமைகளை, இவரது சாதனைகளை நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்றைய தலைமுறை யினருக்கு வழங்கப்படவில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. மேலும் இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமைகளை வேறுபலர் அறுவடை செய்து ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதும் அவர்களின் வேதனை.
1926 ஆம் ஆண்டிலேயே வெளிநாடு சென்று பெண்களுக்கான சம உரிமைக்கு குரல் கொடுத்தவரும் இவரே.
இன்றைக்கு புகழ் பெற்று விளங்கும் ”சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை” இவரது அரிய முயற்சியால் துவங்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள்.
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் போன்றோருக்காக “அவ்வை இல்லம்” தொடங்கினார். காலங்களைக் கடந்து, அந்த இல்லம் புதிய பரிணாமங்களுடன் இன்றும் அரணாக விளங்குகிறது.
நவீன இந்தியாவில் பெண்களுக்கான புதுமைப்பாதையை வடிவமைக்க போர்வாளாக விளங்கிய டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார் அவர்கள் பென்ணுலகத்தினரால் என்றென்றும் போற்றத்தக்கவர் எனில் மிகையில்லை.