Skip to main content

பல்லாங்குழி விளையாட்டு அர்த்தம் தெரியுமா? | How to play Pallanguli

பல்லாங்குழி விளையாட்டு அர்த்தம் தெரியுமா?

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது.

இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப் படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிர்எதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார்.

அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும்.