Skip to main content

"பரத ரத்னா" டாக்டர். எஸ்.ஏ. மதுமிதாவின் நாட்டியப் பெருமை! - மு.பழனிவாசன்

இன்று (20/07/2024)  புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 49 வது ஆண்டு "கம்பன் பெருவிழா" நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை ஸ்ரீ லெட்சுமி டிஸ்பென்ஸரி, ஹோமியோபதி மருத்துவர். எஸ்.ஏ.மதுமிதா அவர்களின் நாட்டியம் இடம்பெற்றது.  அவரது நாட்டியத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவரது நாட்டியத்தை ஒரு சாதாரண ரசிகனாக விமர்சிக்க உரிமையுள்ளது. அந்த வைகையில்தான் இந்த விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 
எடுத்த எடுப்பிலே முதல் பாடலான "ஆடினாள்...நடனமாடினாள்".... என்ற பாடலில் நிமிர்ந்து உட்கார வைத்தார்.  பின் இளையராஜாவின் "ஜனனி...ஜனனி..." பாடலுக்கு அவரின் முகபாவம் மிகவும் அற்புதம். உடல் அசைவுகளையும், முகபாவங்காளையும் மிக இலகுவாக அவர் பொருத்தி நடனாமாடுவது அருமை.

சிலர் முகபாவங்களைத் தெளிவாகக் காட்டுவதற்காக தலையையும் கழுத்தையும் இறுக்கமாக்கிக் கொள்வதுண்டு . ஆனால் இவரோ "எந்த பந்தைப் போட்டாலும் சிக்ஸாக்குறானே" என எண்ண வைக்கும் வகையில், அதையும் மிக எளிதாகக் கையாண்டார்.  அவரின் பார்வை நவசரங்களையும் பொழிவதில் வஞ்சனை காட்டவேயில்லை. "தெருவில் வாரோனோ ... திரும்பிப்பாரானோ..." பாடலில் நாட்டிய ரசனை அற்றவர்களையும் வசீகரித்தது. 

திருமாலின் தசாவதாரத்தை விளக்கும் பாடல்களுக்கு தன் பாவங்களை திருக்குறள் போல குறுகத் தரித்தார். அவை ஒவ்வொன்றுமே பாராட்டுக்குரியதே! நரசிம்ம அவதாரத்திற்கான "எங்கிருக்கிறான் அவன்?" பாடலில் இரணியனையும், நரசிம்மரையும் அவர் கணநேரத்தில் சட்டென மாற்றி பிரதிபலித்தார். நரசிம்மரின் பாவத்தை அவர் வெளிப்படுத்தியபோது அவர் கன்னக் கதுப்புகள் அதிர்ந்தன. நாராயணணை பக்தியோடும், நாட்டியத்தை பாசத்தோடும் அனுபவிக்கும் என்னைப் போன்ற எளிய நபர்களை மெய்சிலிர்க்க வைத்தது.     

கிருஷ்ணாவதாரத்தை நாட்டியத்தால்  விளக்கியபோது அவரது துள்ளலில் ஸ்ரீகிருஷ்ணனே தெரிந்தான். இறுதியில் "சூர்ப்பனகை" யாக தன்னை மாற்றிக்கொண்டு, நடத்திய நாட்டிய நாடகத்தின் சுவையைச் சொல்லி மாளாது. ஒப்பனையில் ஒப்பற்ற கவனம். உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் திறமை. குறுகிய மணித்துளி இடைவெளிகளுக்குள் மீண்டும் மீண்டும் மேடைக்கு வந்து நடனமாடியது அவ்வளவு எளிதாக எவருக்கும் கைகூடாது. ஆனால் இவருக்கு இது கைகூடுகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  அவர் இன்னும் உயர உயரச் செல்வது நாட்டிய உலகிற்கு பெருமை சேர்க்கும். நிச்சயம் இது நடக்கும். எல்லாம் நாராயணன் அருளே!