தாய்பூமியும்; தலைசிறந்த பெண்களும்!

சர்வதேச மகளிர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இந்த நாள் குறித்து இந்தியாவைப் பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் தங்களது முன்னோர்கள் பெண்களை எப்படிக் கொண்டாடியுள்ளனர் என்பதனை அவசியம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இன்றைய சர்வதேச மகளிர் தினத்திற்காக 1857 ஆம் ஆண்டு விதையூன்றப்பட்டு, 1911 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நூற்றாண்டினை எட்டியது. இது உலக அளவிலானது.
நமது பாரத தேசத்தினைப் பொறுத்த வரையில், பெண்கள் என்பது ஒரு போதைப்பொருளல்ல. பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதனை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் , ஆகிய மூன்று யுகங்களிலுமே பெண்கள் மிகவும் பெருமையுடன் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இந்த கலியுகத்தில் இன்றளவும் இந்த நன்னிலை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
அந்நிய கலாச்சாரத்தின் தாக்குதலால் ஒருசில தலைகுனிவான சம்பவங்கள் ஆங்காங்கு நடந்தாலும், ”பெண்கள் நாட்டின் கண்கள்” என்கிற மனோபாவம் அனைத்து தரப்பிலும் இருக்கவே செய்கிறது.
ஏனெனில், நமது பாரத பூமியில்தான் எங்கும் , எதிலும் தாய்மையைப் போற்றும் வண்ணம், பூமிக்கு தாய்பூமி, நதிகளுக்கு பெண் தெய்வங்களின் பெயர்கள், பாரத மண்ணின் சமயங்களான சைவத்தில் “சிவனின் சரிபாதியாக சக்தி”,
வைணவத்தில் ”திருமால் எனப்படும் நாராயணரின் இதயத்தில் மகாலெட்சுமி”,
”சாக்தம்” எனப்படும் சக்தி வழிபாட்டில் “பார்வதிதேவியே சக்தி”,
கெளமாரத்தில் , “அதர்மத்தினை அழிக்க தன் முருகனுக்கு வேல் தந்து ஆதரித்த சக்தி”,
செளரத்தில் ,“பல்வேறு பெயர்களுடன் மாரியம்மன் “ என அனைத்து தெய்வவழிபாடுகளிலும் பெண் தெய்வங்களையே முன்னிறுத்தினர்.
மகாசிவனின் அம்சமான ஆதிசங்கரர் கூட , “கனகதாரா ஸ்தோத்திரம்” என பெண் தெய்வத்தினை நோக்கியே பாடினார்.
பாரதத்தில் பெண்களுக்கு, ஆண்களின் சரிக்கு சரியென்னும் நிலைக்கும் மேலேயே மதிப்பும் , மரியாதையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் வழிவழியாக… பாரதம் முழுமையும், நல்லறிவு, தியாகம், பக்தி, வீரம் என அனைத்திலும் பாரத தேசம் எங்கிலும் பெண்கள் புகழ்பெற்ற வண்ணமே இருந்து வருகின்றனர்.
இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் புகழ்பெற்ற சித்தரிப்புகளில் பல பெண்கள்,
வட இந்தியாவில், ஜான்ஸிராணி லட்சுமிபாய்,
சத்ரபதி வீரசிவாஜியின் மருமகள் “தாராபாய் போஸ்லே”
” சாரதா தேவி அம்மையார்” போன்ற பலரும்,
தமிழகத்தில் சங்ககாலப் புலவர்களான ஒளவையார், காக்கைப்பாடினியார் போன்றோர் ,
அகநானூறு, புறநானூறு குறிப்புகளில் காணக்கிடைக்கும் பெண்கள்,
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள், காரைக்கால் அம்மையார்,
வீரமங்கை வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள்,
1926 ல் பாரீஸ் நகரில் நடைபெற்ற ”அகில உலக பெண்கள் மாநாட்டில்” பெண்விடுதலைக்காக முழங்கிய, பாரதத்தின் முதல் பெண் மருத்துவர் திருமதி.முத்துலெட்சுமி அம்மையார் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
உலகம் பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே , பாரதம் பெண்களின் பெருமையை உயர்த்தும் வகையில், சமநிலை தந்து வருகிறது. ஆக, பாரதத்தினைப் பொறுத்தவரையில், மார்ச் 8 மட்டுமல்ல… ஒவ்வொருநாளும் பெண்கள் தினமே….
பிறவி பெருமையுற பெண்களைப் போற்றுவோம்…