Skip to main content

தெலுங்கு ரசிகர்கள் சிறந்த படங்களை கொண்டாடுகிறார்கள் - சீயான் விக்ரம் பேச்சு

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சீயான் விக்ரம் பேசும்போது, ''நான் 'தூள்', 'சாமி' என மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். இயக்குநர் அருண்குமாரிடம் என்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப்போல் படம் கொடுக்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களுகான ஒரு படத்தைக் கொடுப்பதற்காக நானும், அருண்குமாரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.

இது எமோஷனலான படம். அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள்.

நானும், எஸ் ஜே சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான 'வாலி' படமும், என்னுடைய நடிப்பில் வெளியான 'சேது' படமும் சம காலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம்.

இது ஒரு கமர்ஷியல் படம்தான் என்றாலும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கிறது.

இந்தப் படம் பக்கா மாஸான கமர்சியல் படம் அல்ல. ஆனால் மாஸான காட்சிகள் இருக்கிறது. கமர்சியல் எலிமெண்ட் இருக்கிறது. ஆனால் அவை நேரடியாக இருக்காது.

தெலுங்கில் வெளிவரும் கதைகள் சிறப்பாக இருக்கிறது. கமர்சியல் படங்களை பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் உருவாக்குகிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் சின்ன பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். இங்கு உள்ள மக்கள் சினிமா மீதும், நட்சத்திரங்கள் மீதும் காட்டும் அன்பு அதீதமானது தனித்துவமானது'' என்றார்.