”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 3)

(யானையைப் பற்றிய முந்தைய கட்டுரையில், மாவீரன் அலெக்ஸாண்டர் யானைக் கண்டு மிரட்சி அடைந்தது முதல் அதன் உணவுப்பழக்கம் வரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…)
மஸ்த்:
ஆண் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் உடலியல் நிகழ்வுதான் ”மஸ்த்”. காட்டிலுள்ள ஆண் யானைக்கு மஸ்த் ஏற்பட்டுவிட்டால், அது யானைக் கூட்டத்தில் தனக்கான பெண் யானையைத் தேடிச் சென்று இணை சேரும். ஒவ்வொரு ஆண் யானையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தும், இந்த மஸ்த் காலம் வேறுபடுகிறது.
யானையின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து, 15 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை ‘மஸ்த்’ இருக்கும். அதேவேளையில், ஆரோக்கியமற்ற, நலிவுற்ற சில ஆண் யானைகளுக்கு மஸ்த் ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்கிறார்கள்.
தோட்டங்களில் பயிர்களை அதிகமாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் மிகவும் பலமாகவும் உள்ள ஆண் யானைக்கு ஆண்டுக்கு இருமுறைகூட ‘மஸ்த்’ ஏற்படுகிறதாம்!
யானையின் குணங்கள்: யானைகளால் மனித குரல்களை அடையாளம் கண்டு வேறுபடுத்தி அறிய முடிகிறது. மனித மொழிகள், ஆண் மற்றும் பெண் குரல்கள், நட்புக் குரல்கள் மற்றும் ஆபத்துடன் தொடர்புடையவை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர்களால் சொல்ல முடியும்.
“கோவில் யானை நடக்க நினைக்கும்போது, அதைக் கட்டிப் போட்டிருந்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும். அதேபோல, காட்டு யானைகள் காலத்திற்கு ஏற்ற உணவுகளை உண்ணும். ஆனால் கோவிலில் தினசரி ஒரே மாதிரியான உணவைக் கொடுப்பார்கள். இவையும் கோவில் யானைகளின் கோபத்திற்கு முக்கியக் காரணிகளாகின்றன என்று கூறப்படுகிறது.
மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருப்பதாக, யானைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு நபர் எப்போதும் கோபம் நிறைந்தவராகவும், மற்றொரு நபர் எப்போதும் நிதானத்தோடு இருப்பவராகவும் இருப்பது போலவே ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன.
அதேபோல ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் பிடிக்காது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுய பாதுகாப்பு கருதி கோபத்தை வெளிப்படுத்தும் யானை, அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவதை பல்வேறு யானைகளின் பாகன்களும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
எந்த யானையும் உடனடியாகத் தாக்குதல் நடத்தாது. முதலில் கீழ்ப்படியாமல் முரண்டு பிடிக்கின்றன. அப்போதே அதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், அவை முதலில் பாகன்களையே அடிக்கும்.
அதற்குக் குறுக்கே யார் சென்றாலும் ஆபத்துதான். இதுவே கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளின் குணம். சங்ககால நம்பிக்கை: இப்போது யானையை மனிதர்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள். அந்த காலத்தில் யானையின் வலிமை, ஆற்றலை மக்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
அவற்றின் வலிமையையும், ஆற்றலையும் மக்கள் பயன்படுத்தினர். இப்போது யானையைக் கண்டு மிரண்டு ஓடுகிறோம். ஆனால், அக்காலத்தில் கோயில் யானையின் வாயில் இருந்து சிந்தும் உணவை எடுத்துச் சாப்பிட திருமணமாகாத பெண்களும், திருமணமான பெண்களும் போட்டி போடுவார்களாம்.
அதை எடுத்துச் சாப்பிட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைப்பார்களென்றும், திருமணமான பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்றும் யானையை கடவுளின் வடிவமாக மக்கள் நினைத்ததாக சங்ககாலத்தின் பரிபாடல் கூறுகிறது.
இன்றும்கூட யானை கழிக்கும் “விட்டை”யின் சூடு ஆறுவதற்குள், அதன் மீது ஏறி நின்று நன்கு மிதித்தால், பல்வேறு மருத்துவப்பயன் கிட்டுவதாக நம்பப்படுகிறது. யானையின் முடி தோஷங்களை நீக்குகிறது என்கிற நம்பிக்கை உண்டு. இதனால்தான் அதைவைத்து மோதிரம் அணிகிறார்கள்.
அவசியத்தேவைகள்:
உலகின் மேன்மைக்கு மனிதர்கள் மட்டுமின்றி கண்களுக்கு எளிதில் புலப்படாத நுண்ணியிர்கள்கூட அவசியம்.
இது காட்டுவிலங்குகளையும் உள்ளடக்கும். அவற்றின் வாழ்வியல் பாதுகாப்பிற்கு காடுகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம். குறிப்பாக காடுகள் நீடித்திருக்க யானைகளின் எண்ணிக்கை பெருக்கமும், அவற்றின் பாதுகாப்பும் அத்தியாவசியமானது. உண்மையில் இன்று நடப்பது என்ன?
”படிப்பது இராமாயணம்;
இடிப்பது பெருமாள் கோவில்” என்கிற சொலவடைதான் நடைமுறையில் இருக்கிறது. ஒரு பக்கம், ”யானைகளைப் பாதுகாக்கிறோம்.” என அரசுகளும், சமூக ஆர்வலர்களும், நீதித்துறையும் கங்கணம் கட்டி செயல்படுவதுப்போல் காட்டிக்கொண்டாலும், மறுபக்கம் காடுகள் முழுக்க மனிதர்களுக்கு விதிமுறைகளை உதறித்தள்ளிவிட்டு பட்டா போட்ட நிலங்கள், அவற்றில் வானளாவிய காங்ரீட் கட்டடங்கள், மின்வேலிகள், யானைகளின் வாழ்வியல் வழித்தடங்கள் முழுக்க ஆக்கிரமிப்புகள் போன்ற பல காரணங்கள் யானை இனத்தின் பேரழிவிற்கு முக்கியமான காரணங்கள்.
நியாயமாகப்பார்த்தால், யானைகள் மற்றும் பிற காட்டுவிலங்குகளின் பாதுகாப்பிற்காக பலகோடி அளவிலான நிதி ஒதுக்கப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதனால் விளைந்த பலன்கள் என்ன? காட்டுவிலங்குகளும் பாதுகாப்பாக இல்லை.
இன்றைய தினமலர் நாளிதழில் (சென்னை பதிப்பு- 6 ஆம் பக்கம்) வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 123 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் இயற்கையாக மரணித்தவ்ற்றின் எண்ணிக்கை 107. ”வேறு வகையில் மரணித்தவற்றின் எண்ணிக்கை மட்டும் 16”. அதென்ன வேறுவகை? அவற்றின் தந்தங்களுக்காக கொல்லப்பட்டனவா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர்,”தமிழகத்தில் வனப்பகுதிகளின் பரப்பளவு விரிவாவதில்லை. இதனால் யானைகளுக்கு இடநெருக்கடியும், ஏற்படுகின்றது” என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
சாமானியர் முதல் ஆட்சியாளர்கள் வரை அவர்கள் மனங்களில் கருணைக்கான பரப்பளவு அதிகமாகி, காடுகளைப்பாதுகாக்க வேண்டும். காடுகளின் சீரழிவு எத்தகைய மோசமான நிலையைக் கொண்டுவந்து சேர்க்கும் என தான் வாழ்ந்த காலத்திலேயே பாரதி கட்டுரை எழுதி எச்சரித்துள்ளான்! அவனிடமிருந்த தேசபக்தியையே போற்றாத தமிழகம், இதுபோன்ற சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாமா சீரியஸாகும்!
ஆகையால் மக்கள் விழிப்புணர்வும், கருணை மனப்பான்மையும், ”ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்” என்னும் கோட்பாடே இவ்வுலகினை உய்விக்கும்.