சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் பகுதியை முழுமையான நகர்ப்புற வளர்ச்சியின் முன்மாதிரியாக மாற்றும் நோக்கில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித்திட்டங்கள் கொண்டு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது .
சாலை வசதிகள், சுகாதாரம், கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்
பெரம்பூரில் உள்ள ஜி.என்.டி. (GNT) சாலை பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதில் கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான நவீன வசதிகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நவீன அரசு மருத்துவமனை
பெரம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் கூடிய நவீன அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ‘Food Street’
இரவு நேர பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், சிறு வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எம்.கே.பி. நகர் பகுதியில் நவீன வசதிகளுடன் “Food Street” அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரி மற்றும் பூங்கா மேம்பாடு
வியாசர்பாடி பகுதியில் உள்ள ஏரி முழுமையாக சீரமைக்கப்பட்டு, நடைபாதை, பூங்கா, அமர்விடங்கள், உடற்பயிற்சி வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வளாகங்களுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய அரசு பள்ளி
பெரம்பூர் பகுதியில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, ‘சென்னை ஸ்கூல்ஸ்’ திட்டத்தின் கீழ் அனைத்து நவீன கல்வி வசதிகளுடனும் புதிய அரசு பள்ளி அமைக்கப்பட உள்ளது. இதில் டிஜிட்டல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள்
இந்த வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், பெரம்பூர் தொகுதியில் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
