மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் CCTV வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் வசித்துவரும் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர் பெயர் அன்விகா பிரஜாபதி. சம்பவதினத்தன்று நைகானில் அமைந்துள்ள நவ்கர் நகர் குடியிருப்பில், குழந்தையுடன் வெளியே செல்ல தாயார் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது, சுட்டி தனமாக விளையாடி கொண்டிருந்த அன்விகா பெரியவர்களின் காலணியில் தனது கால்களை இட்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் சுட்டு தனமாக விளையாடி கொண்டிருந்ததை கண்ட அவளது தாய், ஒரே இடத்தில் அமைதியாக அமர வைக்க குழந்தையை ஜன்னல் அருகே காலணி பெட்டி மீது அமர வைத்துவிட்டு, தாயார் காலணி மாட்டிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் குழந்தை ஜன்னலில் ஏறி அமரவும், திறந்து வைக்கப்பட்டிருந்த அந்த ஜன்னலில் பாதுகாப்புக் கம்பிகள் எதுவும் இல்லாத நிலையில், 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தது குழந்தை. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையின் உயிர் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (25.7.2025) மாலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாக காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

