Home செய்திகள் VVIP, VIP புரோட்டோகால் செலவுகளுக்கு ரூ.6.85 கோடி! – 38 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

VVIP, VIP புரோட்டோகால் செலவுகளுக்கு ரூ.6.85 கோடி! – 38 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய-மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் (VVIPs/VIPs) வருகையின் போது அவர்களின் தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட புரோட்டோகால் (Protocol) உபசரிப்புச் செலவுகளுக்காகப் புதிய தலைப்பின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை (G.O.(Ms) No.640, நாள்: 11.08.2026) வெளியிட்டுள்ளது.

முக்கியப் பிரமுகர்களின் வருகை அதிகரித்துள்ளதாலும், ஏற்கனவே இருந்த செலவின வரம்புகள் போதாததாலும், பில்களைத் தீர்ப்பதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; அதேநேரம் இந்த நிதியொதுக்கீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் வருகைகளுக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை.

மாவட்டங்களில் பிரமுகர்களின் வருகை எண்ணிக்கை மற்றும் கடந்த காலச் செலவினங்களின் அடிப்படையில் 38 மாவட்டங்களும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும் (மொத்தம் ரூ.2 கோடி), திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் (மொத்தம் ரூ.1.40 கோடி), சென்னை உள்ளிட்ட மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சமும் (மொத்தம் ரூ.3.45 கோடி) என மொத்தம் ரூ.6.85 கோடி மாவட்ட ஆட்சியர்களின் நிதி நிர்வாகப் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version