சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குலாப்” புயல் இன்று காலை 08.30 மணி நிலவரப்படி கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கலிங்கபட்டினம் – கோபால்பூருக்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதி, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

