தமிழ்த்திரைப்பட பாடலாசிரியராக அடையாளம் காணப்படும் கவிஞர் வைரமுத்து அவர்கள், ஆழ்ந்த, ஆளுமை மிகுந்த தமிழ் ஞானம் கொண்டவர் என்பதில் எள்ளளவும் மாறுபட்ட கருத்து யாருக்குமே இருக்க முடியாது. ஆனால் அவர் ”புரட்சியைப் பற்ற வைக்கிறேன் பேர்வழி” என்று அவ்வப்போது எடக்கு மடக்காக எதையாவது பேசி, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகளை அவிழ்த்துவிட்டு, ஒரு நல்ல கவிஞன் தான் வாழும் காலத்திலேயே அவமானப்படுகிறாரே என்பது என் போன்ற தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமே.
அவருடைய முரண் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு போகலாம்தான். ஆனால், பொய்மைக்கு எவருமே எதிர்ப்பு காட்டவில்லை என்றால், அதுவே ”உண்மை” என கெஜட்டில் கூட இடம்பெற்றுவிடகூடும்.
நெப்போலியன் போர்னபட் கூறியதாக ஒரு மேற்கோள்: ”இந்த உலகம் கெட்டவர்களால் கெட்டுப்போவதில்லை. கெட்டது நடக்கும்போது அதைக் கண்டுகொள்ளாமல் போகும் நல்லவர்களால்தான் கெடுகிறது.” கவிஞர் வைரமுத்துவை விமர்சிப்பதால் நான் மட்டுமே நல்லவன் என்பதைக்காட்டிக்கொள்வதற்காக அல்ல. ஆனால், வைரமுத்து அவர்கள் எண்ணத்தால், தன் கோட்பாடுகளால் மிகவும் தீயவர்” என்பதைக் கோடிட்டுக்காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.
சரி.. எதற்காக இந்த பீடிகை என்றால், 13-07-2025 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து எழுதிய திருக்குறள் உரைநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் வைரமுத்து பேசும்போது, “இதுவரை இந்த சமூகம் பல குறட்பாக்களுக்கு பிழைபட்ட பொருளையே சொல்லி வந்துள்ளது! (அதாவது பட்டிமன்ற நடுவர். சாலமன் பாப்பையா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட 850 பேர் இதுவரை திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். அவர்கள் அத்தனைபேரும் தவறாகவே எழுதியுள்ளனர் என்பதைச் சுட்டுகிறாரோ?! அதுவும் கருணாநிதி அவர்களின் மகன் மு.க.ஸ்டாலின் அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே! ”தலக்கி தில்ல பாத்தியா!”)
”உயிர் நீப்பின் மயிர் நீப்பின்” குறட்பாவில் வள்ளுவர் குறிப்பிட்டது”கவரிமான்” பற்றியது அல்ல என்றும், திபெத், நேபாளத்தில் இன்றும்கூட உயிர்வாழும்”கவரிமா” என்கிற விலங்கினத்தைதான் என்று கூறியுள்ளார். அது குறித்து செய்தியைத் தேடியபோது கிடைத்ததை விஷயங்களை இங்கே பகிர்கிறேன். அதாவது இமயமலைப்பகுதியில் பெருமளவில் வாழும் “யாக்” எனப்படும் ஒரு வகை மாட்டினம். இதுவே அதிக ரோமத்தைக் கொண்டது ஆகும்.
இது குறித்து அடியேனின் பாமரத்தனமான சில கேள்விகளை ஐயா வைரமுத்து அவர்களின் முன்வைக்கிறேன்:
வள்ளுவர் குறிப்பிட்டதாக வைரமுத்து கூறும் “கவரிமா” வள்ளுவர் காலத்தில் தமிழகப்பகுதியில் வாழ்ந்து வந்ததா?
அவ்வளவு அடர்ந்த ரோமம் கொண்ட தகவமைப்பு தேவைப்படுகிற அளவிற்கு தமிழகத்தின் தட்ப வெப்பநிலை தமிழகத்தில் நிலவியதா?
வள்ளுவப்பெருந்தகை இமயமலைப்பகுதிக்குச் சென்று ”யாக்” மாட்டினத்தை நேரில் கண்டுவந்தாரா? அல்லது அக்காலத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் அறிந்தாரா?
தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், மற்றும் பாலை எனப்படும் ஐந்திணைகளை அறிந்திருக்கிறேன். ஆனால், “பனிமலைத் திணை” என்கிற ஒன்றை நான் அறிந்து கொண்டதேயில்லை. ஒருவேளை வள்ளுவர் காலத்தில் அப்படி ஒரு பனிபடர்ந்த பகுதி தமிழகத்தில் இருந்ததா?
வள்ளுவர் தான் கேள்விப்பட்டதை வைத்து எழுதினாரா?
விவரம் அறிந்தோர் அடியேனின் அறியாமையைப்போக்க வேண்டுகிறேன்.
அடுத்ததாக ”காமத்துப்பால்”என்பது தற்காலத்தில் கொச்சைபடுத்தப்படுகிறதாம்! அதனால், வள்ளுவர் வைத்த தலைப்பையே மாற்றி “இன்பத்துப்பால்” என்று புதிய தலைப்பு வைத்துள்ளார்! திருவள்ளுவர் வைத்த தலைப்பையே மாற்றும் உரிமையை அவருக்கு யார் தந்தது? அவரை தமிழறிஞர்கள் கண்டிக்க வேண்டாமா?
”முதல்வன்” திரைப்படத்தில் ..
பெ: வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சிபுட்ட… என்றும்,
ஆ: ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
பெ: ஒம்முதுக தொலச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே.. என்று எழுதியதும்,
“ஆயுத எழுத்து” திரைப்படத்தில்
”வாங்கி போட்டேன் வெத்தலை, செவக்கலை சாமி
வாயி முத்தம் குடுத்த, செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோனும், நல்ல வழி காமி
ஓ ஒட்டுகின்னு மேனி, தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே, வளரட்டும் வயிரு
—
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆ
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா”
என்றெல்லாம் அவர் எழுதியதால் கெட்டுப்போகாத தமிழ்ச்சமூகம் திருவள்ளுவரின் ”காமத்துப்பால்” படித்து கெட்டுப்போகிறதா?
இது மட்டுமா?
திருவள்ளுவரின் ”கடவுள் வாழ்த்து” என்பதை “அறிவு வணக்கம்” என்றும் மாற்றியுள்ளார்! காலக்கொடுமை!
”திருவள்ளுவருக்கு காவி அடிக்கிறீர்கள்” என்றும்,”தமிழர்களுக்கு மிச்சம் இருப்பது திருவள்ளுவர்தான்.. அவரையும் பறித்து விடாதீர்கள்” என்று புலம்பித் தள்ளியுள்ளார்.
திருவள்ளுவர் நிச்சயம் இந்துதான். அவர் உடுத்தியது காவிதான் என்கிறோம். அதற்கென்ன இப்போது? எதற்காக மடைமாற்றும் வேலை?
திருவள்ளுவர் இந்துதான் என்பதை கண்ணதாசன் தனது “அர்த்தமுள்ள இந்துமதம்” நூலின் இரண்டாம் பாகத்தில் பக்கம் எண் 58 முதல் 64 வரையிலும் ”வள்ளுவர் ஓர் இந்து”என்று தலைப்பிட்டு, பல குறள்களை அதற்காக மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும் அந்த அத்தியாயத்தின் இறுதியில்,” ஆகவே தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்பது என் துணிபு” என்று ஆணித்தரமாக கூறியுள்ளாரே.. இதற்கு என்ன பதில்?
ஆகச்சிறந்த கவிஞர் கண்ணதாசனுக்கு ”கவியரசு கண்ணதாசன்” என்று அடைமொழி கொடுத்து அன்போடு அழைத்த தமிழ்ச்சமூகத்தை, தங்கள் பெயருக்கும் முன்னால் “கவிப்பேரரசு” என்று கட்டாயப்படுத்தி போடவைத்து, அதையும் நடத்திக்காட்டி, அப்படியே அழைக்க வைத்த மமதைதான் காரணமா?
தான் பிறந்த தமிழ்ச்சமூகத்தை மேலும் மேலும் குழப்புவதற்காக ஏமாற்றுசக்திகளின் கைக்கூலியானதால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்கிற முடிவிற்கு வந்துவிட்டீர்கள் போல! இப்போதும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை.. இனியாவது திருந்துங்கள்..
ஒரு கலைஞனோ.. கவிஞனோ.. தான் வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல் போகக் கூடும். ஆனால் தான் வாழும் காலத்திலேயே அதுவரை தான் ஈட்டிய நற்பெயர், புகழ் அனைத்தையும் இழந்து போகும் இழிநிலை எதிரிக்கும் வரக்கூடாது. அந்த நிலை இனியும் தங்களுக்கு ஏற்படாமல் காத்துக்கொள்ளுங்கள்.
தமிழை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். பரவாயில்லை. ஆனால், நம் தமிழை உயிர் பிழைக்க விடுங்கள்.
மு. பழனிவாசன்

