ஸ்டார்ட் .. ஆக்ஷன்..
அத்தியாயம்.27.
இயக்குனர். பி.ஆர். பந்துலு..
கலை வள்ளலாக வாழ சபதம்.. எடுத்திருந்த பி.ஆர்.பந்துலு.. அவர்கள்.. தயாரித்து இயக்கிய.. படம்..
வள்ளல்களின் திலகம்.. கர்ணன் கதா பாத்திரத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடிக்க..மிகப் பிரம்மாண்டமாக உருவாகிய
‘கர்ணன்’ திரைப் படம்!
புராணக் கதைகளை திரைப்படங்களாக எடுப்பது என்பது கடவுளை கண்ணால் காண்பது போல கடினமான செயல்!.. அப்படிப்பட்ட சூழலில் மகாபாரதத்தில் கீர்த்தி பெற்ற கதா பாத்திரமான கர்ணனின் கதையை திரைப்படமாக உருவாக்க பி.ஆர்.பந்துலு அவர்கள் முடிவு செய்தார்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் …ஆந்திராவின் உச்ச ஸ்டார் என்.டி..ராமாராவ் அவர்கள் கண்ண பரமாத்மாவாக.. நடிக்க.. படம் பிரமாண்டமாக உருவாகியது!..
ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் கர்ணன்!
சரித்திரத்தை உருவாக்கிய புராண படம்!
மதராஸ் விஜயா கார்டனில் 1963 இல் துவங்கிய படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்றது..
பெங்களூர் அரண்மனையில் முதன் முதலில் படம் பிடிக்கப்பட்ட சரித்திரத்தை உருவாக்கியது! ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு!…
அதற்குப் பிறகு மகாபாரதப் போர் நடந்ததாக சொல்லப்பட்ட குருஷேத்திரத்திலேயே போர் காட்சிகள் படமாக்கப்பட்டன!
இந்திய இராணுவத்தின் குதிரைப் படைகளும்.. பீரங்கிப் படைகளும்.. பயன்படுத்தப் பட்டன!
61 குதிரைப் படைப் பிரிவினர்.. 80 யானைகள்.. 400 குதிரைகள்… படப்பிடிப்பில் கலந்து கொண்டன!
மதராஸில் இருந்து நிறைய ரதங்கள் தயாரிக்கப்பட்டு அவைகள் குருஷேத்திரத்துக்கு பெரும் பொருட் செலவில் எடுத்துச் செல்லப் பட்டன! அந்த ரதங்களை எல்லாம் படப் பிடிப்பு முடிந்த பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு தானமாக பி.ஆர். பந்துலு அவர்கள் கொடுத்து விட்டார்!
கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’.. என்ற பாடலில் பகவத் கீதையின் அத்தனை சாராம்சங்களையும் கவியரசு கண்ணதாசன் அவர்கள் வடித்திருந்தார்! அதைப் போலவே கர்ணன் உயிர் விடும் முன் தேரோட்டி கிருஷ்ணர் பாடும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. உறங்காது’ என்ற பாடல் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!..
அற்புதமான பாடல்கள்! எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் நடித்து தயாரான படம்.. ரிலீஸ் செய்யப்பட இருந்த சூழலில்.. ஒரு.. சிக்கல்.. எழுந்தது..
அதே கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் ‘வேட்டைக்காரன்’ படமும் ரிலீஸுக்குத் தயாராக இருந்தது! வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழித்து வெளியிடலாம்.. என்று எம்ஜிஆர் அவர்களுக்கு சொல்லப் பட்டது!
கர்ணன் படத்தின் பிரம்மாண்டத்துக்கு முன்பு வேட்டைக்காரன் படம் போட்டி போட முடியாது என்று பொதுவான கருத்து நிலவியது!
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பி.ஆர்.பந்துலு அவர்கள் தனிப்பட்ட முறையில் கர்ணன் படத்தை போட்டு காட்டினார்! அதை பார்த்து விட்டு எம்.ஜி.ஆர் அவர்கள்… ‘கர்ணன் படமும் வெற்றி பெறும்!.. வேட்டைக்காரன் படமும் வெற்றி பெறும்! இரண்டும் வேறு வேறான படங்கள்! இரண்டுக்கும் வேறு வேறான ரசிகர்கள் இருக்கிறார்கள்! இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெறும்.. ஒரே நாளில் வெளியாவதில் தவறில்லை!’ என்று தன் முடிவை சொல்லி விட்டார்! அப்படியே இரண்டு படங்களும் வெளியாகி இரண்டும் பெரிய சாதனைகளைப் படைத்தன !..
கர்ணன் படம்.. நல்ல வசூலை தந்தது!.. ஆனாலும்.. படத் தயாரிப்புக்கான செலவுகளை… ஒப்பிடுகையில் … பி.ஆர். பந்துலு அவர்களுக்கு கர்ணன்.. படம்.. இலாபகரமான ஒன்றாக அமையவில்லை..! ரீ – ரிலீஸில் இன்றும்.. வசூலைக் கொட்டும் படமாக கர்ணன் விளங்குகிறது.
அதற்குப் பிறகு பி.ஆர். பந்துலு.. அவர்கள்..
எடுத்த படம்.. ‘முரடன் முத்து’!
சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த அந்தப் படமும்.. சரிவர ஓடவில்லை..
பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட பி.ஆர். பந்துலு.. அவர்கள்.. ஒரு முடிவெடுத்தார்!
ஒரு துருவத்தை விட்டு.. விலகி.. இன்னொரு துருவத்தின் வாசல் கதவைத் தட்டினார்!
அந்தத் துருவம்?
அந்த வாசல்?
அந்தப் படம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

