கடந்த 2008ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், இப்போது அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்கூர் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்கூர் , லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2008ல் செப். 29-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிக்குசௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு குறித்து பிரக்யா தாக்கூர் கூறியதாவது: “ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னேன், விசாரணையில் யாரையாவது அழைத்தால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். என்னை அழைத்தார்கள், கைது செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள். இது என் வாழ்க்கையையே அழித்துவிட்டது. நான் ஒரு சந்நியாசியின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு ஒரு குற்றவாளி பட்டம் சூட்டப்பட்டது, யாரும் எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் ஒரு சந்நியாசி. அவர்கள் சதித்திட்டத்தின் மூலம் பகவாவை (காவி உடையை) அவமானப்படுத்தினர். இன்று, பகவா வென்றுள்ளது, இந்துத்துவா வென்றுள்ளது, குற்றவாளிகளை இறைவன் தண்டிப்பான்,” என்று கூறினார்.

