Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்வசனங்களால் இன்றும் வாழும் வியட்நாம் வீடு சுந்தரம் நினைவு நாளின்று!

வசனங்களால் இன்றும் வாழும் வியட்நாம் வீடு சுந்தரம் நினைவு நாளின்று!

இந்த வெள்ளித்திரையுலகில் ஒரு ஆக்டரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, டைரக்குடர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே இல்லை.

பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், கதையை ஒருவர் எழுதியிருப்பார். வசனத்தை ஒருவர் எழுதியிருப்பார். அதன் பின்னர், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், பாலசந்தர், பாக்யராஜ் என அடுத்தடுத்து வந்த டைரக்டர்கள் அவர்களே கதை, வசனம் எழுதினார்கள்.

ஆனால் எழுபதுகளில், ‘கதை நல்லாருக்கு’ என்று பல பாராட்டுகளைப் பெற்று, ‘வசனமெல்லாம் பளிச் பளிச்சுன்னு இருக்குய்யா’ என்று பல கைத்தட்டல்களைப் பெற்று, அந்தக் கதாசிரியரை, வசனகர்த்தாவை ‘யார் யார்’ என விசாரித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர் எந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கார் என்பதை அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அடைமொழியுடன் சொன்னால் போதும்… தடக்கென எல்லோருக்கும் புரிந்துவிடும். அவர் பெயர்- வியட்நாம் வீடு சுந்தரம்.

சிவாஜியின் பெயரைச் சொல்லாமலே, அவர் நடித்த கேரக்டர்களின் பெயர்களைச் சொல்லி, அந்தப் படங்களின் மொத்தக் கதையையுமே சொல்லிவிடுவோம். அப்படியாக, சிவாஜிக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் ஏராளம். அவற்றில், மிக மிக முக்கியமானதொரு இடத்தை மக்களின் மனங்களின் பிடித்த கேரக்டர்கள்… பிரஸ்டீஜ் பத்மநாபன், பூண்டி மாதாக்கோயில் ஆன்டனி,பாரீஸ்டர் ரஜினிகாந்த். முதலாவது ‘வியட்நாம் வீடு’. அடுத்தது… ‘ஞானஒளி’. மூன்றாவது… ‘கெளரவம்’. இந்தக் கேரக்டர்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜிகணேசன். கேரக்டர்களை உருவாக்கியவர்… சுந்தரம். வியட்நாம் வீடு சுந்தரம்.

திருச்சிதான் பூர்வீகம். சென்னைக்கு வந்த சுந்தரம், டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். அதேசமயம், எழுத்திலும் ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதினார். அப்போது சினிமாவை விட நாடகத்தின் மீதுதான் எல்லோருக்குமே மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சுந்தரம் நாடகத்துக்காக கதை ஒன்றை எழுதினார். 62ம் ஆண்டு அரங்கேறிய அந்த நாடகத்துக்கு வந்தவர் எம்ஜிஆர். ‘இந்தக் கதையை எழுதிய பையன், பின்னாளில் பெரியாளாக வரப்போகிறான்’ என்று சொல்லி வாழ்த்தினார்.

டயர் கம்பெனி ஜாப் என்பதாலோ என்னவோ வாழ்க்கைச் சக்கரமும் சுழன்றது. ஒருபக்கம் வேலை… இன்னொரு பக்கம் எழுத்து என்று ஓடிக்கொண்டிருந்தார் சுந்தரம். ஒரு சூழலில் ஒரு நாடகத்தைக் கருத்தில் வைத்து, கதையை எழுதினார். அந்தக் கதையை எழுதி, ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த ஒய்.ஜி.பி., ‘யோவ், இந்தக் கதை பிரமாதமா இருக்குய்யா. ஆனா எங்க ட்ரூப்புக்கு பொருந்துறதை விட, இதுல சிவாஜி கணேசன் நடிச்சாத்தான்யா பொருத்தமா இருக்கும். முயற்சி பண்ணிப்பாரேன்’ என்று, வாசலைக் காட்டினார். ஆனால் வழி? சிவாஜியை நெருங்கும் வழி தெரியாது கைபிசைந்து தவித்தார் சுந்தரம். ‘’அது 65ம் வருஷம். அதுக்குப் பிறகுதான் என்னென்னவோ நடந்துச்சு. என் சகோதரிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். அவளுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அந்தக் கதையை அவங்களோட பக்கத்துவீட்டு மாமிகிட்ட சொல்லிருக்கா. அந்த மாமியை கதை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிருச்சு. மாமி அவங்க வீட்டுக்காரர்கிட்ட கதையைச் சொல்லி, விவரத்தைச் சொல்லிருக்காங்க. அவர் என்னடான்னா… சிவாஜி அண்ணாகிட்ட இந்தக் கதையைச் சொன்னார். அவர், சிவாஜி அண்ணாவோட ஆடிட்டர். ‘அந்தப் பையனை வரச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டார் சிவாஜி. அங்கேருந்துதான் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் அல்ல… வாழ்க்கையே ஆரம்பிச்சுது’’ என்று ஒருமுறை சுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில்‘கெளரவம்’. படத்தை ‘தி இந்து’ ரங்கராஜனுடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்து, அதனை சிவாஜியிடம் தெரிவிக்கச் சென்றார் சுந்தரம்.“அப்படியா… நல்லது நல்லது. நீ என்ன பண்றே? இந்தப் படத்தை நீயே டைரக்ட்டும் பண்ணிடுறே” என்று சிவாஜி சொல்ல, படத்துக்குக் கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கினார் வியட்நாம் வீடு சுந்தரம்.

அப்படியாக திரைப் பயணம் தொடர்ந்தது. சில படங்களுக்குக் கதை மட்டும் கொடுத்தார். சில படங்களுக்கு மட்டும் வசனம் எழுதினார். சித்ரா லட்சுமணன் தயாரித்து கமலை வைத்து இயக்கிய ‘சூரசம்ஹாரம்’ படத்துக்கு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் தான் வசனகர்த்தா. தொலைக்காட்சி பக்கமும் கால் பதித்து, கதையிலும் வசனத்திலும் ஏன் நடிப்பிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

ஒரு கதையை எப்படி உருவாக்க வேண்டும், எந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு காட்சியில், ஒரு சம்பவத்தில் என்ன வசனம் பேசினால், ரசிகர்கள் ஒன்றிப்போவார்கள் என்பதன் சூட்சுமங்களை அறிந்து வைத்த மிகச்சிறந்த கதை வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். 2016 இதே ஆகஸ்ட் 6-ல் காலமானார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments