Ai image
மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் ஷானூர் வாடி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை ஒன்று உள்ளது. அதன் அருகில் வங்கி ஏடிஎம் மையமும் உள்ளது. நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் அங்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம் எந்திரம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் வங்கிக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வங்கி கிளை மேலாளர் ஜவஹர் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை கும்பல் காரில் கயிறு கட்டி ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் காரில் ஏடிஎம் மையத்துக்கு வந்துள்ளனர். அந்த கும்பல் ஏடிஎம் எந்திரத்தில் கயிறைக்கட்டி கார் மூலம் இழுத்துள்ளனர். ஆனால் அதனை பெயர்க்க முடியவில்லை. ஏடிஎம் எந்திரத்தை அப்படியே அல்லாக்காக தூக்கி சென்று விடலாம் என்று நினைத்து அவர்கள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
இதை அடுத்து அந்த கும்பல் ஸ்க்ரூ டிரைவர் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து, அதில் ஒரு உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கொள்ளை கும்பல் ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏடிஎம் எந்திரத்தை காரில் கட்டி கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

