கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொல்ல பிளான் போட்ட மனைவி, கள்ளக்காதலன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் பகுதியில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். அவரது மனைவி பவானி இருவரும் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். அந்த கடையில் வேலை செய்பவர் மதன்குமார். இந்நிலையில் மதன்குமாருக்கும், பவானிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பவானியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கணவர் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். அது தெரியாமல் இருவரும் வழக்கம் போல் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை கண்டுபிடித்த கணவர் மதனை கடையிலிருந்து துரத்தி விட்டு மனைவி பவானியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பவானி கணவன் அரிகிருஷ்ணனை கூலிப்படை ஏவி கொல்ல முயன்றுள்ளார். திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை அணுகி அரிகிருஷ்ணனை கொலை செய்ய சொல்லி ரூ.15 லட்சம் பேரம் பேசி, ரூ2.லட்சம் பணத்தை முன் பணமாக கொடுத்துள்ளனர். இது தெரியாமல் அரிகிருஷ்ணன் வழக்கம் போல் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றுள்ளது. இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
அப்போது கூலிப்படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு உனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய 15 லட்சம் ரூபாய் பேசி, இரண்டு லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளதை கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் உயிரோடு விட்டு விடுகிறோம் என்றும் பேரம் பேசியுள்ளனர். உயிர் மேல் உள்ள பயத்தால், ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை கொடுத்துள்ளார் அரிகிருஷ்ணன். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி மற்றும் கள்ளக்காதலன் மதன்குமார் இருவரையும் மட்டுமில்லாமல் திருவாரூர் மாவட்டதை சேர்ந்த கூலிப்படையினர் விக்னேஷ் (21) ,விஜய் (31), மணிகண்டன் (33) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

