Sunday, March 22, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 49. இயக்குனர். தேவராஜ்-மோகன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 49. இயக்குனர். தேவராஜ்-மோகன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 49.

இயக்குனர். தேவராஜ்-மோகன்.

தமிழ் திரைப் படங்களை பெரும்பாலும் செட்டுகள் போட்டு சென்னையிலேயே எடுக்கக் கூடிய சூழல் இருந்த கால கட்டத்தில் முழுக்க முழுக்க வெளிப் புறத்திலேயே  ஒரு முழு படத்தை எடுத்து அதை வெள்ளி விழா படமாக்கிய இயக்குனர்கள் இவர்கள்!..

எம்.எஸ்.விஸ்வநாதன் என்கின்ற இசை ஆளுமை மட்டும் ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் இசை துறையை புரட்டிப் போட்டு ஒரு புதிய அலையாக …. ஒரு இளைய இசை அமைப் பாளர்  உருவான திரைப் படத்தை தந்தவர்கள் இவர்கள்!

இவர்கள்தான் …. தேவராஜ்மோகன் என்கின்ற இயக்குனர்கள்! இருவரும் இணைந்து செய்த சாதனைகள் பல!…

இயக்குனர்.பி.மாதவன் அவர்களிடம் உதவியாளர்களாக பல காலம் பணியாற்றினார்கள்!. அதற்குப் பரிசாக தனது அருண் பிரசாத் மூவிஸ் நிறுவனம் மூலமாக பொண்ணுக்கு தங்க மனசு என்ற திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பை தேவராஜ் மோகன் அவர்களுக்கு பி.மாதவன் அவர்கள் வழங்கினார்!.

அவர் வைத்த நம்பிக்கையை அவரது சிஷ்யர்கள் பொய்யாக்கவில்லை! ‘பொண்ணுக்கு தங்க மனசு’…. தரமான ஒரு படமாக அமைந்தது!  அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜயகுமார் அவர்கள் இரண்டு  நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார்!.. படம் பேசப் பட்டது !

அதைத் தொடர்ந்து சில படங்களை இயக்கிய அவர்கள் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம்

1976 இல் வெளி வந்த அன்னக்கிளி’…!

கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அவர்களின் வித்தியாசமான .. கதை…!.ஒரு பெண்ணின் ஆழமான காதலைச் சொல்லும்.. கவித்துவமான  படமாக அன்னக்கிளி அமைந்தது! சிவகுமார் அவர்களோடு திருமதி சுஜாதா அவர்களும் நடித்தார்கள்! இளையராஜா அவர்கள் முதல் முறையாக படத்திற்கு இசை அமைத்தார்!

படத்தின் பாடல்களில் அதுவரை தமிழக மக்கள்  கேட்டிராத வாத்திய கருவிகளின் ஓசைகள்! கிராமிய ஒலிகள்..!.

ஒரு புது இசைப் பிரவாகம்.. கங்கை.. காவேரி.. நதிகளாய்.. பட்டி தொட்டி எங்கும் பாய்ந்தது!..  அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ ‘அடி ராக்காயி மூக்காயி’.. ‘சொந்தமில்லை.. பந்தமில்லை போன்ற பாடல்கள் அமோக வரவேற்பு பெற்றன! சத்தியமங்கலம் தெங்கு மரஹாடா.. கிராமத்தில் முழுக்க எடுக்கப் பட்ட படம்ஒரு ‘Trend setter’ ஆக அமைந்தது!

அன்று ஆரம்பித்த இளையராஜா அவர்களின் பயணம் இசை ஞானியாக உலகமெங்கும்  இந்த நொடி வரை அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது  !..

இசைத் துறையில் அவர் பல சரித்திர சாதனைகளை புரிய அன்னக்கிளி படமே ஆழமான விதை போட்டது!

ஆர்.செல்வராஜ் அவர்கள் அன்னக்கிளி.ஆர்.செல்வராஜ் என்ற பெயரில் பல சாதனை புரிய இத் திரைப் படம் வழி வகுத்தது!

தேவராஜ் மோகன் அவர்கள் இயக்கிய ரோசாப்பூ ரவிக்கைக்காரி படமும் மறக்க முடியாத ஒரு காவியம்!..

1979 இல் இத் திரைப் படம் வெளியானது! நடிகர் சிவகுமார் அவர்களுக்கு 100 வது படம்!

பொதுவாக நூறாவது படம் என்பது பல நேரங்களில் அந்த குறிப்பிட்ட நடிகருக்கு வெற்றிப் படமாக அமையாமல் போய்விடும்! ஆனால் சிவகுமார் அவர்களின் விஷயத்தில் அப்படி நிகழாமல் அவரது 100 வது படம் ஒரு வெற்றி படமாகவே அமைந்தது!

படப்பிடிப்பு முழுக்க ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கிராமத்திலும்.. அதைச் சுற்றிய வட்டாரத்திலும் எடுக்கப்பட்டது! ‘பரசங்கட கொண்டே திம்மா என்ற கன்னட படத்தை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம்…!

சிவகுமார் அவர்களுக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க காரணமாக இருந்த படம்!

தேவராஜ் மோகன் அவர்களுக்கும்.. நல்ல பெயரைப் பெற்றுத்தந்த படம்..!

தமிழ் திரையுலக படப்பிடிப்பு தளங்களை கிராமங்களுக்கு மாற்றி ….வேறு பாதையில் அவை பயணிக்க காரணமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமான இடம் தேவராஜ் மோகன் அவர்களுக்கு உண்டு!..

இசைஞானி இளையராஜா உருவாகி இசை துறையில் மகத்தான வேறு பாணி.. இசை அமைவதற்கும் தேவராஜ் – மோகன் அவர்கள்.. ஒரு காரணி எனலாம்.

அவர்களின் திரைப் படங்கள்நம் மனதில் என்றென்றும்.. வாசம்.. செய்யும்!…

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments