இந்த நாள், தற்கொலையைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனநலம் தொடர்பான புரிதலை மேம்படுத்துவதற்கும், சமூகத்தில் உள்ள தவறான கருத்துகளையும் களங்கத்தையும் நீக்குவதற்கும் முக்கியமான ஒரு தளமாக விளங்குகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (IASP) இணைந்து 2003 ஆம் ஆண்டு முதல் இந்த நாளை முன்னெடுத்து வருகின்றன.
2025 ஆண்டுக்கான கருப்பொருள்
2024 முதல் 2026 வரையிலான மூன்றாண்டு கருப்பொருளாக “தற்கொலையைப் பற்றிய புரிதலை மாற்றுதல்” (Changing the Narrative on Suicide) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருளின் முக்கிய அழைப்பு வார்த்தையாக “உரையாடலைத் தொடங்குங்கள்” (Start the Conversation) அமைந்துள்ளது. இந்தக் கருப்பொருள், தற்கொலை குறித்து மௌனமாகவும், தவறான புரிதலுடனும் இருக்கும் சமூக அணுகுமுறையை மாற்றி, திறந்த மற்றும் இரக்கமுள்ள உரையாடல்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்கொலையின் உலகளாவிய தாக்கம்
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 7,20,000 பேர் தற்கொலை மூலம் உயிரிழக்கின்றனர். இது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒரு உயிரிழப்பு என்ற வகையில் அதிர்ச்சிகரமான எண்ணிக்கையாகும். மேலும், 15-29 வயதுடைய இளைஞர்களிடையே தற்கொலை மூன்றாவது முக்கிய மரண காரணமாக உள்ளது, அத்துடன் 73% தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. இந்த இழப்புகள் தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்கள், நண்பர்கள், பணியிடங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆழமான உணர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது.
90 சதவீதம் பேர் மனஅழுத்தத்தையும் தற்கொலை எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சுற்றியுள்ளோர், குடும்ப உறுப்பினர்கள் அதை கவனிக்கத் தவறுகின்றனர். மனச்சோர்வை வெளிப்படுத்துபவர்களை அழைத்து பேசி மனமாற்றம் செய்ய வேண்டும். மனம் விட்டு பேசுவதற்கு வடிகால் ஏற்படுத்தினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவார்கள்.

