Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்16 வயதினிலே படத்திற்கு 48 வயசாச்சு!

16 வயதினிலே படத்திற்கு 48 வயசாச்சு!

முன்னொரு காலத்தில்  நம் சினிமாக்களின் படப்பிடிப்பு அம்புட்டும்  அரங்குகளிலேயே சுழன்றுகொண்டிருந்துச்சு. அப்படி செட்  எனப்படும் அரங்குகளை விட்டு தமிழ் சினிமா வெளியே வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் முதன் முறையா முழுப் படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படமே, ‘16 வயதினிலே’தான். இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு, ஏகப்பட்ட படங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பிச்சிபுடுச்சு. அதை அடுத்துதான் தமிழ் திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலம் புதியதொரு சகாப்தமே உருவாச்சு. இதற்கெல்லாம் காரணம், அந்த அல்லி நகரத்து இளைய இயக்குநர் பாரதிராஜா.

அது சரி ஒரு சினிமா என்பது என்னவெல்லாம் செய்யும்? மக்களை ரசிக்கவைக்கும். இன்னொரு முறை, இன்னொரு முறை என படம் பார்க்கத்தூண்டும். திரையிட்ட தியேட்டர்களில் ’ஹவுஸ்ஃபுல்’ போர்டு நிரந்தரமாக இருக்கும். வசூல் குவியும். படத்தில் நடித்தவர்கள் பாராட்டப்படுவாய்ங்க. இயக்குநர் கொண்டாடப்படுவார். வரிசையாக படங்கள் கிடைக்கும். நடித்தவர்களும் கேரக்டர்களும் கேரக்டர்களின் பெயர்களும் மனதில் பதிஞ்ச்சுபுடும். பாடல்கள் ஹிட்டாகும். முணுமுணுக்க வைக்கும். திரும்பத்திரும்பக் கேட்கத் தோன்றும். மிகச்சிறந்த படம் என்றால் அந்த வருடத்துக்கு ஏதேனும் விருதுகள் கிடைக்கும். 

ஆனா இவற்றையெல்லாம் கடந்து, தமிழ் சினிமாவின் பாதையை மடைமாற்றிவிட்டது மட்டுமில்லாம  இன்றைக்கும் அந்தப் படத்துக்கு இணையான கிராமத்துப் படம் இல்லவே இல்லை என்பதும் பின்னர் அதை அடியொற்றி பல படங்கள் வந்தன என்பதும் பல வருடங்கள் கழித்தும் மறக்கமுடியாத படங்களின் பட்டியலில் அந்தப் படமும் இருப்பதும்… என பல சாதனைகளையும் சரித்திரங்களையும் செய்ததுதான் ‘16 வயதினிலே’.

படத்தின் தொடக்கத்தில் டைட்டில்  போடும் போதே பாரதிராஜா எம்புட்டு புதுமையான மனுசர் என்று  எல்லாரும் கவனிச்சு அசந்துபுட்டாய்ங்க. படத்தில் ஸ்ரீதேவி, ரஜினி கமலஹாசன் ஆகியோர்களை காட்டும் பொழுது அவிய்ங்க பெயர் வராது- பதிலாக அவிய்ங்க கதாபாத்திரங்களின் பெயர்தான் வெளியாகும்  இது ஒரு சாதாரண விஷயமல்ல நடிகர்களின் சம்மதம் இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் 16 வயதினிலே திரைப்படம் முடிந்தபிறகு அந்த திரைப்படத்தை  டிஸ்ட்டிரிபியூடர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது ஆனால் விநியோகஸ்தர்கள் ஒருத்தர் கூட இந்தப்படத்தை வாங்க முன்வரலை .என்னதான் புகழ்பெற்ற நடிகர்கள் இசைஞானி இளையராஜா என பிரம்மாண்டமாக திரைப்படம் அமைந்தாலும் கமலஹாசனை சப்பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, இந்த திரைப்படம் வெற்றி பெறுமா அப்படீங்கற  தயக்கம் இருந்துச்சாம்.
அதனால் கடைசிவரை இந்த திரைப்படத்தை யாரும் வாங்க முன்வராத சூழலில்  புரொடியூசர் ராஜ்கண்ணு சொந்தமாக படத்தை  ரிலீஸ் செஞ்சார். படம் வெளியாகி 175 நாள் ஓடி மிகப்பெரிய சாதனை செஞ்சுது. எங்கு பார்த்தாலும் 16 வயதினிலே பற்றிய பேச்சுதான். அந்தளவு மாபெரும் வெற்றி . 

ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகர் கமலஹாசன் நடிப்பை பார்த்து மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப்பூட்டாய்ங்க.

கூடவே இந்த 16 வயதினிலே திரைப்படத்தை பத்திரிக்கைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாய்ங்க. கமலஹாசன் என்றால் இப்படித்தான் அப்படீன்னு பல இயக்குனர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் பாரதிராஜா அவரை எப்படியும் காண்பிக்கலாம் என்று நிரூபித்து அதில்வெற்றி பெற்று ஒரு புதுமையை வெளிக்காட்டினார் பாரதிராஜா.

ஒரு சூழலில்  அந்த மயிலு கேரக்டர் உருவான கதை குறித்து கேட்டப் போது பாரதிராஜா சொன்ன சேதியிது:

‘நான் நைன்த் ஸ்டேண்டர்ட் படிச்சுக்கிட்டு இருந்தப் போது எங்க பக்கத்து ஊர் ஸ்கூலில் ஒரு பொண்ணு படிச்சாள். அவள்தான் என் கனவுல பிரதேசத்தின்  ‘மயில்’.  அவளைத்தான் நான் உயிருக்கு உயிராக லவ் செஞ்சேன். என் நிஜவாழ்வில் நான் துரத்தித் துரத்தி காதலித்த அந்தப் பெண் பரிசுத்தமான என் காதலை நிராகரிச்சு புட்டு, நிர்கதியாக நிற்கவிட்டுப்புட்டு போயிட்டா. ஆமா.. உண்மையான வாழ்வில் சப்பாணியாக நானும், மயிலாக அவளும் இருந்த போது என்னைவிட்டுப் பிரிந்து போனா..  அதனால்தான், சினிமாவில் சப்பாணி, மயிலின் காதலை நிறைவேற்றி வைச்சேன். ஆரம்பத்தில் அப்படத்தில் மயில் கேரக்டருக்கு ரோஜாரமணியையும், சப்பாணி வேடத்துக்கு நாகேஷையும் போட  முடிவு செஞ்சோம். ஆனா எனக்கென்னவோ  ஊரில் நான் காதலித்த மயிலின் சாயல் கொஞ்சம்கூட ரோஜாரமணிக்குப் பொருந்தாததால், யாரைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் நான் தவிச்சிக் கொண்டிருந்தேன். 

அப்போது மலையாளத்தில் ஐ.வி.சசி படத்தில்  நடிச்சுக்கிட்டிருந்தார், ஸ்ரீதேவி. அடுத்து கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே இவள்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் மயிலு என்று என் மனசுக்குள் நினைச்சிக்கிட்டேன். உடனே
ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். என் ’16 வயதினிலே’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன். ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை. திரைப்படத்தின் முழுக்கதையையும் சொன்னபிறகு, எனது நிபந்தனைகளை ஶ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் சொல்ல ஆரம்பிச்சேன். 

என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி… அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே ‘என்ன சார் சொல்றீங்க…’ அப்படீன்னு ஷாக் ஆயிட்டா ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் அப்படீன்னு  சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலைஅலையாய் தோன்றி மறைந்துச்சு. அப்பாலே  ஒரு வழியாக ’16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கிட்டார். 

கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாய்ங்க.           

என் முதலாளி ராஜ்கண்ணு   படத்தை முதலில்  பிளாக் & ஒயிட்டி  எடுத்தால் போதுமுன்னு சொன்னார். ஆனா இந்த நட்சத்திரங்கள் கமிட் செஞ்ச் பிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார். 

கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் ஷீட் செய்யப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைச்சுது. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கிட்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு ஷூட்டில் இருப்பார். 

என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் ‘செந்தூரப்பூவே…’ பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடிச்சபோது அப்படி ஹேப்பி ஆகி போனேன். அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை. 

பொதுவாக படப்பிடிப்புக்கு நடிக்க வரும் நடிகைகள், எப்போது பேக்கப் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதன்பின், அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குப் பறந்துடுவாய்ங்க. ஶ்ரீதேவி இதற்கெல்லாம் விதி விலக்கானவர், ’16 வயதினிலே’ படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பார்த்துவிட்டு நகராமல் ‘எனக்கு இந்த இடமெல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு சார், என்னால பிரியிறதுக்கு மனசே வரலியே…’ என்றபடி ஸ்தம்பித்துப்போய் கதறி அழ ஆரம்பிச்சுட்டார். அவருடைய அம்மா எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவரை ஆசுவாசப்படுத்த முடியாமல் தவித்துப்போனார். 

இன்னொரு முறை சந்தித்த போது மேலும் சொன்ன சேதியிது :

 

‘16 வயதினிலே’ படத்துக்காக 27 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சப்பாணி கேரக்டருக்கு கமலை ஒப்பந்தம் செஞ்சோம். அந்தப் படத்தில் அதிகபட்ச சம்பளம் கமலுக்குத்தான். அடுத்து பரட்டை கேரக்டருக்கு ஆள் தேடியபோது ஒரு பைக்கில் வந்து இறங்கினார் ரஜினி. யார் என விசாரிச்சப்போ, ‘பாலசந்தர் படத்தில் நடிச்சிட்டு இருக்காரு’ என்றார்கள். கூர்மையான மூக்கு, நெற்றியில் விழும் தலைமுடி என்று துறுதுறுப்பாக இருந்தார். ‘இவர்தான் பரட்டை’ என முடிவு செஞ்சோம்.

‘சின்ன பட்ஜெட்டில் ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஒரு படம் பண்றேன்… பரட்டைன்னு ஒரு கேரக்டர், நீங்க பண்றீங்களா?’ என்றேன். ‘அப்படியா? எவ்ளோ எவ்ளோ எவ்ளோ சம்பளம் குடுப்பீங்க’ன்னு சுறுசுறுப்பு காட்டியவர், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார். ‘அவ்வளவு முடியாது. ஒரு மூவாயிரம்…’ என நான் இழுக்க, ஓகே சொல்லிட்டார். கடைசியில் அதுவும் கொடுக்க முடியாம 2500 ரூபாய்தான் கொடுத்தோம். ஷூட்டிங்கில் நாலு வடை, இரண்டு இளநீர் வாங்கி கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் கொடுப்போம். ரஜினிக்கு கொடுக்க வழியில்லை.

சப்பாணி கேரக்டருக்கு அரை டவுசர், நைந்துபோன சட்டைதான் காஸ்ட்யூம். கிடாரை வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்துகொண்டிருந்த காலத்தில், அழுக்கு உடை போட கமல் ஒப்புக்கொள்வாரா ன்னு எனக்கு சந்தேகம். இது தெரிஞ்சதும், பக்கத்தில் இருந்த கல்லில் சட்டையைத் தேய்த்து அழுக்காக்கி போட்டுக்கொண்டு, தலையைக் கலைத்துவிட்டு ‘இப்ப ஓகேவா’ன்னு கமல் கேட்டப்போ அசந்துட்டேன். இதாவது பரவாயில்லை… ‘கோவணம் கட்டுவதுபோல ஒரு இடம் இருக்கு’ன்னு தயங்கித் தயங்கிச் சொன்னபோது, உடனே டிரஸ்ஸை கழற்றிப் போட்டு கோவணத்துடன் வந்து நின்றார். கமல் மாதிரி துணிச்சலான கலைஞனைப் பார்ப்பது அரிது.

இதை எல்லாம் தாண்டி `இது நம்ம படம்’ என்று அக்கறை எடுத்துக்கொண்டு இசையால் படத்துக்கு ரத்தமும் நாளமுமாய் இருந்தவன் இளையராஜா. அவன் இல்லாவிட்டால் படத்தின் பாதி பெருமை குறைந்திருக்கும். என்னை இந்தப் படத்திலிருந்து நீக்க யார் யாரோ எத்தனையோ முயற்சிகள் செய்தும், நான்தான் இயக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு தான் என்னை விதையாக நட்டவர். என் மகன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது என் வீட்டுக்கு வந்து அட்வான்ஸ் கொடுத்துச் சென்ற அந்த நாள் என் கண்ணுக்குள்ளேயே நிக்குறது. ஃபியட் காரில்தான் வருவார் முதலாளி. அவருக்கு மூன்று குழந்தைகள். படத்தை வாங்க யாரும் முன்வராதபோது முப்பாத்தம்மன் கோயிலில் உட்கார்ந்து, ‘கடவுளே… என் முதலாளியைக் காப்பாற்று’ என்று அழுதிருக்கிறேன். இப்படி பல சோதனைகளைச் சந்தித்து சாதனை செய்த படம்தான் ‘16 வயதினிலே’! அப்படீன்னு சொன்னாராக்கும்..

அப்பேர்பட்ட 16 வயதினிலே ரிலீசாகி 48 வருஷங்களாச்சு.. இன்னிக்குப் போய் பாரதிராஜாவிடம் பேச்சுக் கொடுத்தாலும் அப்படம் ரெடி பண்ணும் போது நடந்த பல புது விஷயங்களை நினைவுக் கூர்ந்து வாய் பிளக்க வைத்து விடுவார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments