Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்நீதித்துறையை கொச்சைப்படுத்தும் (திருப்பரங்குன்றம் தீர்ப்பிற்கும், நீதிபதிக்கும்) எதிரான புத்தகத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.. பாஜக...

நீதித்துறையை கொச்சைப்படுத்தும் (திருப்பரங்குன்றம் தீர்ப்பிற்கும், நீதிபதிக்கும்) எதிரான புத்தகத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.. பாஜக கண்டன அறிக்கை!

திருப்பரங்குன்றம் தீர்ப்பிற்கும், நீதிபதிக்கும் எதிரான சட்ட விரோத புத்தகத்தை தமிழக அரசு பறிமுதல் செய்து, தடை விதிக்க வேண்டும்.

தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை மத ரீதியாக கொச்சைப்படுத்துவது நீதித்துறையை, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விடும்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கொச்சைப்படுத்தும் புத்தகங்களை தடை செய்து, அச்சிடப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். உடனடியாக இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை இந்து மதவாதியாக சித்தரிக்கும் புத்தகத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்து, மத நல்லிணக்கத்திற்கு எதிராக தேச விரோத கருத்துக்களை கொண்ட இந்த புத்தகங்கள் நாளைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெறாமல் இருப்பதை தமிழக அரசும் சென்னை மாநகர காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும்.

கீழே காற்று பதிப்பகம் சார்பாக இந்த புத்தகங்களை விற்க மாட்டோம் என்று தாங்களாவே மேம்போக்காக, அறிவித்திருந்தாலும், அந்த அறிவிப்பில் சட்டவிரோத இந்து விரோத மத நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லி, வெறுப்புணர்ச்சி தூண்டி இருக்கிறார்கள். இந்த புத்தகங்களை தனிநபர் மூலமாகவோ,மற்ற புத்தக கடைகள் மூலமாகவோ,தமிழகத்தில் வேறு எங்கும் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் தீர்ப்பை செயல்படுத்தாமல் அடாவடி செய்து, அராஜகத்தில் திமுக அரசு ஈடுபட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன்
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அழுத்தம் திருத்தமாக அளித்து தெளிவான விளக்கங்களை கூறியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீப விழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி மதுரை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை மதுரை ஹைகோர்ட் நேற்று உறுதி செய்துள்ளது

கோவிலையும், கோவில் மரபுகள், திருவிழாக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோவில் பணத்தில், கோவிலுக்கு எதிராக டெல்லியில் இருந்து வழக்கறிஞரை வைத்து வாதிடுகிறது. இந்துக்களாக வாழ்வதற்கே வரி விதித்த கொடுங்கோல் மொகலாய மன்னன் அவுரங்கசீப் ஆட்சியில் கூட இதுபோன்ற அட்டூழியம், அராஜகம் நடந்திருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

இதுவரை எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, வழக்குகளை விரைந்து தீர்த்து வைத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டுவரக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்து விரோத கட்சிகள் மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தன.

நீதிபதி கொடுத்த தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக, அவரை பதவி நீக்கம் கோரிய அநீதி உலகில் எங்குமே நடந்திருக்காது. கட்டுக்கட்டாக வீட்டில் பணம் வைத்திருந்த, கையும், களவுமாக மாட்டிய நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோராதவர்கள், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோருகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருக்க வேண்டும்.

இப்பொழுது திமுக அரசு மீண்டும் இந்துக்களுக்கு எதிரான மதவாத சதி திட்டத்துடன், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று திராவிட மாடல் ஆட்சியின் குரலாக, திருப்பரங்குன்றம் விவாரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பின் எதிரொலியாக, தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என்று நாடக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பல வழிகளில் கேலியும், கிண்டலும் செய்து அவமதித்தவர்கள் தூண்டுதலில், அவரை இந்து மத அடையாளங்களுடனான கேலி சித்திரத்துடன், ‘திருப்பரங்குன்றம் விவகாரம் : ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ்.எஸ். ரவுடியா?’ என்ற தலைப்பில் புத்தகத்தை கீழைக்காற்று என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்பொழுது தனி நீதிபதியின் உத்தரவை மதுரை ஹைகோர்ட் உறுதி செய்தும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதால், ஏற்கனவே தனி நீதிபதி
குறித்து அவதூறாக கீரைக்காட்டு பதிப்பகம் புத்தக வெளியிட்டது போல், திமுகவின் தூண்டுதலின் பேரில் இது போன்ற தவறுகள் தொடரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பில், அரசு தூண்டிவிட்டால் மட்டுமே இத்தகைய குழப்பம் ஏற்படும் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த ஒரு அரசும் இந்த அளவுக்கு தாழ்ந்து செயல்படக்கூடாது என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

கீழை காற்று பதிப்பகம் இந்து விரோத பதிப்பகம். இவர்கள் தொடர்ந்து வெளியிட்ட பல புத்தகங்கள், இந்து மதம், இந்து மக்களுக்கும், தேசத்திற்கும் எதிரானவை.

இதை அனுமதித்தால், நாளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவரே நீதிபதியாக இருந்திருக்கிறார். நீதிபதியாக இருந்து ஹரிபரந்தாமன், சந்துரு போன்றவர்கள் யார் என்பது, பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளில் இருந்து அறியலாம்.

பல்வேறு மதங்கள், ஜாதி, மொழி பேசுபவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். இந்து கோவில் தொடர்பான வழக்குகளில், வேறு மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அதையெல்லாம் ஏற்க மாட்டோம் என இந்துக்கள் கூறவில்லை. நீதிபதியின் தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் மேல்முறையீடு வாய்ப்புகள் இருக்கும்போது, நீதிபதி மீது தனிப்பட்ட தாக்குதல் அதுவும் அவரது மதம், ஜாதியை குறிவைத்து தாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர அனுமதித்தால், இனி தீர்ப்பு பிடிக்கவில்லை எனில் அனைத்து நீதிபதிகள் பற்றியும் இப்படி புத்தகம் வரலாம். அது நீதித்துறையின் மகத்துவத்தை, மதிப்பை கெடுத்து விடும். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விடும்.

ஒருவர் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை, அவரது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்வார்கள். கீழைக்காற்று பதிப்பகம் போன்ற இந்து விரோதிகள் எடுக்கும் ஆயுதத்தை, நாளை மற்றவர்களும் எடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை மட்டுமல்ல, நீதித்துறையை கொச்சைப்படுத்தும் புத்தகத்தை தமிழக அரசு தமிழகத்தில் வேறு எங்கும் விற்க அனுமதிக்க கூடாது. இல்லையெனில் அதன் விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்
செய்தி தொடர்பாளர்
தமிழக பாஜக

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments