தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எல்பிஜி கப்பல்கள் வரும் ‘ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்முஸ்’ கடல் வழிப் பாதை மூடப்பட்டதே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எரிவாயு தேவையில் 60% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுவதால் விநியோகத்தில் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையைச் சீராக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போதிய அளவு ‘ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்’ கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்ட அவர், வணிக ரீதியிலான சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 21-லிருந்து 25 நாட்களாகத் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
2014-ல் 14 கோடியாக இருந்த கேஸ் இணைப்புகள் தற்போது 33 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், வீடுகளுக்குத் தேவையான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

