Monday, March 23, 2026
Homeஆன்மீகம்களத்திர தோஷம் போக்கும் திருக்கண்டியூர்!

களத்திர தோஷம் போக்கும் திருக்கண்டியூர்!

களத்திர தோஷம் போக்கும் திருக்கண்டியூர்!

அறந்தாங்கி சங்கர்

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது புராணம் கூறும் வரலாறு. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும்.

பிரமன் ஐந்து சிரங்களுள் ஒன்றை தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் – கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

· அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

· “சாதாதாப” முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம் ‘ என்றும் பெயர்.

· பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

· சூரியன் வழிபட்ட தலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

· சப்த ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர் திருவிழா) ஐயாறப்ப சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்வார் . சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) – கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

· நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

· மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

· பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.

· இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

· கல்வெட்டில், இப்பெருமான், “திருவீரட்டானத்து மகாதேவர்”, “திருக்கண்டியூர் உடைய மகாதேவர்” எனக் குறிக்கப்படுகிறார்.

இங்கு திருமணத்தடை போக்கும் பரிகாரம் வாழைக்கன்றினை வைத்து செய்யப்படுகிறது. களத்திர தோஷம் போக்கும் திருத்தலமாக திருக்கண்டியூர் விளங்குகிறது. திருமண வாழ்க்கை அமையாமல் கஷ்டப்படுபவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டு நல்ல இல்லற வாழ்க்கை அமைய பெறலாம் என்று கோவில் சிவாசாரியார் விக்னேஷ் குருக்கள் ( அலைபேசி எண் : 94435 61731) தெரிவித்தார் .

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருக்கண்டியூர் தஞ்சாவூர் – திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : 04362 – 261100, 262222

அறந்தாங்கி சங்கர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments