Thursday, April 16, 2026
Homeசெய்திகள்தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்!

தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து விவசாயி நாராயணனுக்கு விஜய் சிறப்பு செய்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தவெக தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “ திருக்குறள் நமக்கு ஒரு வழிகாட்டி. எனவே திருக்குறள் சொன்ன அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக கொண்டு நம் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறம் என்றால் நேர்மை, எனவே நேர்மையான அரசுக்கு வாக்குறுகள் இடம்பெற்றுள்ளது. அரசியல், ஆட்சி முறை, வேளாண்மையின் பொருளை உருவாக்கும் வகையில் அரசு இருக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு இன்பத்துடன் இருக்கும் வகையில் நம் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கை நேர்மையாக இருக்கும். நாங்கள் ஸ்டாலின் சார் போல பொய்யாக சொல்வதில்லை.

இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒரே மாதிரியாகவே உள்ளது. ஒருவர் 10,000 ரூபாய் கொடுத்தால், இன்னொருவர் ரூ.8000 கூப்பன் கொடுக்கிறார். இருவரும் ஒரே தேர்தல் அறிக்கையை பெயரை மாற்றி, கலரை மாற்றி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறில்லை. நாம் அவர்களைப்போல மக்களை ஏமாற்ற மாட்டோம். எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதைமட்டுமே தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம்” என்றார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

💫💫வெற்றி மகளிர் திட்டம்: 60 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் ரூ.2500 வரவு வைக்கப்படும்.

💫 ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.

💫 12-ஆம் வகுப்புவரை மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க மாணவர்களின் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

💫 12ஆம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் திட்டம்.

💫 ஒவ்வொருவருக்கும் வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்.

💫 29 வயதுக்கு மேல் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4000, பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.

💫 ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.

💫 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

💫 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

💫 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

💫 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கும்.

💫 அனைத்து மாவட்டங்களிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்கும் உண்டு உறைவிடப்பள்ளிகள்

💫 ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

💫 போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்

💫 குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

💫 ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சத்துக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

💫 ஏஐ மூலம் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

💫 நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.3500 வழங்கப்படும்

💫கரும்புக்கு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.4500 வழங்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments