தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் வெள்ளிக்கிழமை (மே 8) முதல்வராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
பொதுத்துறை சார்பில் அமைச்சர்களுக்கான அலுவலக அறைகளைப் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கான வாகனங்கள் மற்றும் அறைகளைச் சீரமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிய அரசு அமைந்த பிறகு சட்டப்பேரவையில் நடைபெறும் பெரும்பான்மை நிரூபிப்பு நிகழ்வை முன்னிட்டு, பேரவை மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிகளில் சட்டப்பேரவைச் செயலகம் ஈடுபட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் தற்போதே பரபரப்பாகக் காணப்படுகிறது.

