தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசில், அவரது மிக முக்கிய தூண்களாகக் கருதப்படும் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் முதலமைச்சரின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக முதலமைச்சரின் ஆலோசகர்களாக (Advisors to the Chief Minister) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னணியில் இருந்து, கட்சியின் தேர்தல் வியூகங்களையும் பிரச்சார உத்திகளையும் வகுத்துக் கொடுத்து ‘மாஸ்டர் பிரைன்’ ஆகச் செயல்பட்டவர் ஜான் ஆரோக்கியசாமி என்பதால், தற்போது அரசு நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இவருடைய நியமனம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால அரசியல் நகர்வுகள் முதல் அமைச்சரவை உருவாக்கக் கட்டம் வரை நிழலாய் உடனிருந்து, திரைமறைவில் அனைத்து விவகாரங்களையும் நேர்த்தியாகக் கையாண்ட அவரது நம்பிக்கைக்குரிய விஷ்ணு ரெட்டியும் ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளதால், புதிய அரசின் நிர்வாக முடிவுகள் மற்றும் முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்த இரட்டைக் கூட்டணி மிக வலிமையானதொரு ஆதிக்கத்தைச் செலுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

