Friday, May 22, 2026
Homeசெய்திகள்மேகதாது விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு — தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!

மேகதாது விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு — தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!

“மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் தற்போதைய தவெக அரசு மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசை மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதைத் தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் ஆட்சி மாறினாலும் மாறாத காட்சியாகவே உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் தவெக அரசு காங்கிரஸ் தயவில் இயங்கும் ஒரு ‘பொய்க்கால் குதிரை அரசு’ என்பதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இவர்களால் திடமான நிலைப்பாடு எடுத்துப் பேச முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாதுவில் பூமி பூஜை போடுவது வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்றும், தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசுதான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா என்றும் கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், காவிரி நதிநீர் என்பது தமிழகத்தின் ஜீவாதாரம் என்றும், அங்கு அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், காவிரி தொடர்பாகத் தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அதிமுக ஒருநாளும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், தனது தெளிவான நிலைப்பாட்டையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments