பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை (28-05-2026, வியாழக்கிழமை) சென்னை மெட்ரோ இரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சனிக்கிழமைக்கான கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, வழக்கம்போல் காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றாலும், பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு நேர இடைவெளிகளில் இரயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் காலை 08:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 17:00 மணி முதல் இரவு 20:00 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல், காலை 05:00 மணி முதல் 08:00 மணி வரையிலும், மதியம் 11:00 மணி முதல் மாலை 17:00 மணி வரையிலும் மற்றும் இரவு 20:00 மணி முதல் 22:00 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் இரயில்கள் வந்து செல்லும் என்றும், இரவு 22:00 மணி முதல் 23:00 மணி வரை மட்டும் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது;
எனவே நாளை பொது விடுமுறை நாளில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த மாற்று நேர அட்டவணையை அறிந்து தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
