தமிழகத்தின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பசுமைவளாகக் கப்பல் கட்டும் தொழில் தொகுப்பை (Greenfield mega ship-building cluster) அமைப்பதற்கான மத்திய அரசின் கொள்கை அளவிலான (In-principle) ஒப்புதல் வழங்கப்பட்ட போதிலும், தமிழக அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு மேல்நடவடிக்கையும் இல்லாததால் அந்தத் திட்டம் தற்பொழுது முழுமையாக முடங்கிக் கிடப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான ‘மசகான் டாக் லிமிடெட்’ (Mazagon Dock Limited) இந்த மெகா திட்டத்தைத் தூத்துக்குடியில் தொடங்க ஆர்வம்காட்டி தமிழக அரசை அணுகியபோது, அதற்குச் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால், அந்நிறுவனம் தனது முதலீட்டை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டம் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் (DG Shipping) பரிந்துரையின் பேரில் தேசிய கப்பல் கட்டும் இயக்கம் (National Ship Building Mission) மூலம் முதற்கட்டப் பரிசீலனை முடிந்து கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றும், ஆனால் அதன் பிறகு விரிவான திட்ட அறிக்கை (DPR) உள்ளிட்ட அடுத்தகட்டத் தரவுகள் எதையுமே தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தமிழக அரசுடன் தொடர்ந்து விவாதித்த போதிலும், அவர்களிடமிருந்து முறையான தகவல் தொடர்பு (Communication) இல்லாததால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாகவும், அதே நேரத்தில் தூத்துக்குடி திட்டத்தைப் பொறுத்தவரை தமிழக அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் வரை இன்னும் சில காலம் பொறுத்திருக்கத் தயாராக இருப்பதாக மசகான் டாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

