டாஸ்மாக் கடைகளில் புதிய புரட்சி… இறக்குமதி மது வகைகள் அறிமுகம்!
தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து, வாடிக்கையாளர்களுக்குப் கூடுதல் மது வகைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்கவும், அதன் மூலம் அரசு வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஏராளமான மது பிராண்டுகள் கிடைப்பதால், பலர் வெறும் பீர் வகைகளுக்காகவே அங்கு செல்லும் சூழல் உள்ளதால், டாஸ்மாக் தனது வருவாய் இழப்பைத் தடுக்கவும், உள்ளூர் பிராண்டுகளின் ஏகபோக ஆதிக்கத்தை உடைக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதிக அளவிலான புதிய மற்றும் இறக்குமதி செய்யப்படும் பிராண்டுகளைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, சிறந்த குளிர்சாதன வசதி மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ‘எலைட்’ (Elite) டாஸ்மாக் கடைகளில் இந்த இறக்குமதி செய்யப்படும் மது மற்றும் பீர் வகைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவுள்ளன. அண்டை மாநிலங்களில் செயல்படும் பல முன்னணி மது உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தமிழக சந்தையில் நுழைய ஆர்வம் காட்டியுள்ள நிலையில், அவர்கள் மாநிலத்தின் கலால் வரி விதிப்புகளுக்கு உட்பட வேண்டும் என்றும், விலை நிர்ணயம் அரசின் கலால் வரி அமைப்பைப் பொறுத்தே அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றுடன், சாதாரண டாஸ்மாக் கடைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சாத்தியமான இடங்களில் தற்போதுள்ள 250 சதுர அடி கடைகளை 500 சதுர அடியாக விரிவாக்கம் செய்யவும், கடைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பித்து அதன் சுற்றுப்புறச் சூழலை மாற்றியமைக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை, ஜெர்மனி, பூட்டான் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பீர் வகைகள் எலைட் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களில் இறக்குமதி செய்யப்படும் மதுவிற்கான தேவையை உணர்ந்து, பீர் மற்றும் விஸ்கி வகைகளில் கூடுதல் பிராண்டுகளைக் கொண்டு வரவும், சாதாரண கடைகளின் தரத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது

