Tuesday, July 21, 2026
Homeசெய்திகள்சென்னை மாநகராட்சியில் DVAC அதிரடி: பல கோடி முறைகேடு அம்பலம்! 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

சென்னை மாநகராட்சியில் DVAC அதிரடி: பல கோடி முறைகேடு அம்பலம்! 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்திய திடீர் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் அம்பலமாகி, 7 அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, திரு.வி.க நகர் மண்டலத்தின் (வார்டு 74) பகுதி செயற் பொறியாளர் ஆர். சரவணன் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வரி இன்வாய்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவரது அதிகாரப்பூர்வ காரில் இருந்து அதே மண்டலத்தின் பெண் உதவி பொறியாளர் டி. சரஸ்வதியின் வீட்டுக்கடன் தொடர்பான ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன.

சரவணன் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் ₹10.61 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது தவிர, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ‘பரிசாகப்’ பெற்றதாகக் கூறப்படும் ₹32,000 மதிப்புள்ள வெளிநாட்டு மதுபாட்டில்களும் இவரது அலமாரியில் இருந்து கைப்பற்றப்பட்டன.

அதேபோல், பெண் உதவி பொறியாளர் டி. சரஸ்வதியின் பெயரில் மாதாந்திரத் தவணையாக ₹25,000 வீதம் 246 மாதங்களுக்கும், ₹5,000 வீதம் 182 மாதங்களுக்கும் முதலீடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தங்கச் சேமிப்புத் திட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த முதலீடுகளுக்கான வருமான ஆதாரத்தை அவரால் முறையாக விளக்க முடியவில்லை. மேலும், இவரது கூகுள் பே (Google Pay) கணக்கின் 14 பக்க பரிவர்த்தனை ஆவணங்களை ஆய்வு செய்ததில், கடந்த 6 மாதங்களில் மட்டும் கணக்கில் வராத வகையில் ₹1.71 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவரும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டார்.

இதே வளாகத்தில் பணிபுரிந்த உதவி செயற் பொறியாளர் (நகரமைப்பு) ரவிவர்மனின் கணக்கில் கடந்த 6 மாதங்களில் விளக்கமளிக்கப்படாத வகையில் ₹2.39 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இருந்தது கண்டறியப்பட்டு அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் சேர்த்து, திரு.வி.க நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் கணக்கில் வராத ₹1.39 லட்சம் ரொக்கப் பணம் சிக்கிய விவகாரத்தில் இளநிலை உதவியாளர் மணிகண்டன், கண்காணிப்பாளர் ஏ. ஸ்ரீராமுலு, சுகாதார அதிகாரி ஏ. மஞ்சித் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆர். கோதண்டன் ஆகிய நால்வரும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments