Homeஆன்மீகம்திருச்செந்தூர் சூரசம்ஹாரம் காணச் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! 1,915 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் –...

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் காணச் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! 1,915 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முன்பதிவு செய்வது எப்படி?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களும் இணைந்து வருவதால் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,915 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 13ஆம் தேதி 600 பேருந்துகளும், நவம்பர் 14ஆம் தேதி 525 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்காக நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் முடிந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் கூடுதல் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, திருச்செந்தூருக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சார்பிலும் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 15ஆம் தேதி பிற்பகல் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மாலை திருச்செந்தூரைச் சென்றடையும். பின்னர், இரவு திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்குத் திரும்பும் வகையில் ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் மட்டுமின்றி, நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணத்தைக் காண விரும்பும் பக்தர்களுக்கும் இந்தப் போக்குவரத்து ஏற்பாடுகள் பயனுள்ளதாக இருக்கும்.

பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே தங்களது பேருந்து பயணச்சீட்டுகளைப் பதிவு செய்துகொள்ளலாம். இதற்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnstc.in மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்கள் மற்றும் தானியங்கி பயணச்சீட்டு முன்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும் டிக்கெட் பெறலாம். பயணிகள் தங்களது பேருந்து புறப்படும் இடம், நேரம் மற்றும் பயண விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது.

பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் முக்கியப் பேருந்து நிலையங்களில் போதிய போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவைக் காணச் செல்லும் முருக பக்தர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பேருந்து அல்லது ரயில் வசதிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகச் சென்று வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments