Skip to main content

பண்ணைபுரத்தானின் பயணம் - மு.பழனிவாசன்

ஐஐடி மெட்ராஸ் தன்னுடைய அடுத்த அத்தியாமாக ஒரு புதுவிஷயத்தைக் கையிலெடுத்திக்கிறது. ஆம் ! மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் பெயரில் இசை குறித்த ஆராய்ச்சி…! அது இசை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட உள்ளது.

    ”இசையில் என்னய்யா ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது?” என ஒரு சிலர் எள்ளி நகைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் முதல்வகையினர் இளையராஜா குறித்து காழ்ப்புணர்வில் கருகிப்போவோர்,

இரண்டாம் வகையினர் இசையின் மேன்மையை உணராதவர்களாக இருப்பர்.

இந்த பிரபஞ்சம் ஒலியால் மற்றும் ஒளியாய் விளங்குவது. நாதத்தின் தலைவனாக கடவுள் சிவனே விளங்குகிறான் என்பது சனாதன தர்மம்.

இறைவனைக் கண்டு அவனுள் கரைந்துபோகச்செய்வது இசை ஒன்றே.

சில நூற்றாண்டுகளுக்கும் முன்னர் சமயக்குரவர் நால்வரில் திருஞான சம்பந்தரும், அப்பரும் இணைந்து திறக்கவே முடியாத திருமறைக்காடு சிவன் கோவில் வாசலில் நின்று, சிவபெருமான பணிந்தேத்தி, பாடித்துதித்து, அதன் மூலமே கதவுகளைத் திறந்தனர் என்பது வரலாறு.

இன்றும் பல கோசாலைகளில் ஜீவிக்கக்கூடிய பசுக்கள், அங்கு ஒலிபரப்பப்படும் திவ்யமான இசைகேட்டவன்ணம் ஆரோக்கியமாக விளங்குவதுடன், அதிகமான பால் தருகின்றன என்பது கண்கூடான உண்மை. மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் தன் பால்ய வயதில் புல்லாங்குழலை வாசித்துதானே பசுக்களை மேய்த்தான்!

சங்கீத உலகின் மும்மூர்த்திகள் இசையால்தானே இறைவனை தரிசித்தார்கள் !

செடிகளும் மரங்களும் கூட இசையை ரசிப்பதாகவும், அவை கேட்கும் இசைகேற்ப அவற்றின் அசைவுகளும், குணாதிஒசியங்களும் இருப்பதாக மேல்நாட்டு விஞ்ஞானிகள் மெய்ப்பித்திருக்கிறார்களே!

மானிடப்பிறப்பின் பிறப்பு முதல் இறப்பு வரை நம் மூச்சுக்காற்றுக்கு இணையாக நம்முடன் பயணிப்பது இசைதானே!

தீராத கடும் நோய்களிலிருந்து இசையால் நிவாரணம் கிட்டுவதை நவீன மருத்துவ உலகம் ஒப்புகொண்டுள்ளதே !

”இந்துமத திருக்கோயில்களில் இசைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல வேறெந்த மதமும் அளித்திருக்கிறதா ?”என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இறைவனுக்கு இசை ஒவ்வாதது என்று கூறும் மதங்களும் உண்டு என்பதே உண்மை.

இப்படி மொழியற்ற ஒலியான இசையின் மூலம் மானிட இனம் மட்டுமின்றி புழுப்பூச்சிகளும்கூட அடைந்து கொண்டிருக்கும் பயன்கள் சொல்லி மாளாது. ”இசை” என்பது உயிரினங்களுக்கான ஒருவித “விசை”யாகும்.