Skip to main content

எம் ஜி ஆரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான படகோட்டி ரிலீஸான நாள்!

படகோட்டி சினிமா எம்.ஜி.ஆர்.,க்கு வெற்றி படம் என்பதை தாண்டி, கவிஞர் வாலி என்பவரை அறிமுகம் செஞ்ச படம் என்கிற வகையில் மிக முக்கியமான படம். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுக்களிடையே நடக்கும் மோதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் படகோட்டி.

அனைத்து தரப்பு மக்களுக்காகவும் படம் எடுத்த எம்.ஜி.ஆர், மீனவ மக்களுக்காக எடுத்த விசேஷ திரைப்படமாகவும் படகோட்டி பார்க்கப்படுது. படகோட்டி ரிலீஸ் ஆன பிறகு, அவருக்கு மீனவ மக்களின் ஏற்பட்ட க்ரேஸ் அபரிமிதமானது.   1964 நவம்பர் 3 ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்த படகோட்டி, சிவாஜி கணேசனின் நவராத்திரி மற்றும் முரடன் முத்து ஆகிய இரு படங்களுடன் நேருக்கு நேர் மோதியது. சிவாஜின் இரு படங்களுக்கு நேர் எதிராக மோதி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது படகோட்டி. 

சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி எனும் மிகப்பெரிய தயாரிப்பாளர் படத்தை எடுத்தார். டி.பிரகாஷ்ராவ்  டைரக்ட் பண்ணியிருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைச்சிருந்தாய்ங்க.

சக்தி கிருஷ்ணசாமி படத்துக்கான வசனங்களை எழுதினார். ஒவ்வொரு வசனமும் ‘அப்ளாஸ்’ அள்ளிச்சு. 

அதேபோல் நாகேஷ், ஏ.வீரப்பன், மனோரமா வருகிற நகைச்சுவைக் காட்சிகளை ஏ.எல்.நாராயணன் எழுதினார். இந்த ஏ.வீரப்பன், பின்னாளில்  எக்கச்சக்கமான படங்களுக்கு காமெடி காட்சிகளுக்கா வசனங்களை எழுதினார் என்பது கொசுறுத் தகவல். ஏ.எல்.நாராயணனின் நகைச்சுவை வசனங்கள் நெசமாவே கலகலப்பூட்டி கைத்தட்டவைச்சுது . நாகேஷுக்கும் அசோகனுக்கும் சண்டை. அடிவெளுத்துவிடுவார் அசோகன். ரிக்கார்டு மியூஸிக் போடப்படும். நாகேஷுக்கு வீரம் வரும். அசோகனைப் புரட்டியெடுப்பார். ஏ.வீரப்பன் தெரியாமல் மியூஸிக்கை நிறுத்துவார். மீண்டும் நாகேஷ் அடிவாங்குவார். ரகளையான காமெடியில் தியேட்டரே குலுங்கிச் சிரிச்சுது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள், கேரளா, ஆலப்புழா, சுற்றுவட்டார கடலோரப் பகுதிகள் என எடுக்கப்பட்டன. பிரபல ஒளிப்பதிவாளர் பி.எல்.ராய் தன் ஒளிப்பதிவுக் கோணங்களால் படத்தை அழகுறக் காட்டினார். குறிப்பா, நம்பியார் வீட்டு பங்களாவையும் படகுப் போட்டி காட்சிகளையும் கடலோரப் பகுதிகளையும் இயல்பு மாறாமல் காட்டினார். இன்றைக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால், பலரின் வீடுகளிலும் படகுகளிலும் சுவர்களிலும் எம்ஜிஆர், சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ‘படகோட்டி’க்குப் பின்னர், எம்ஜிஆருக்கு இந்தப் பகுதி மக்களிடம் மவுசு எகிறிபுடுச்சு .

இந்தப் படம் வெளியான தருணத்தில் ‘பாட்டுக்கு படகோட்டி’ என்றே மக்கள் கொண்டாடி மகிழ்ந்து ரசித்தார்கள். அந்த அளவுக்கு பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுச்சாக்கும் .  ஒரே ஒரு பாட்டு எழுத வந்த வாலியை எல்லாப் பாடல்களையும் எழுதச் சொன்னார் எம்ஜிஆர். அதுமட்டுமா? ‘படகோட்டி’ எனும் டைட்டிலை வைத்ததே கவிஞர் வாலிதான்!

’கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை/ உறவைக் கொடுத்தவர் அங்கே/ அலை கடல் மேலே அலையாய் அலைந்து/ உயிரைக் கொடுப்பவர் இங்கே/ வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு/ முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலில் மீனவ வாழ்க்கையை மிக யதார்த்தமாகச் சொல்லியிருப்பார்.

’மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?/ மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?/ உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!/

படைத்தவன்மேல் பழியுமில்லை/ பசித்தவன்மேல் பாவமில்லை/ கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்/ உழைத்தவர்கள் தெருவில் நின்றார்/பலர் வாட வாட சிலர் வாழ வாழ/ ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை’ என்று ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என்ற வரிகளில் உணர்ச்சிப்பிழம்பென வரிகளைக் கொடுத்தார் கவிஞர் வாலி.

’நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி... ஹோய்/ நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி.. ஹோய்ஹோய் ஹோய்.. வந்தாலும் வருவாண்டி/’ என்று ‘என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’ எனும் பாடலில் காதலுக்கு அகராதியே எழுதியிருப்பார்.

’ஊரறியாமல் உறவறியாமல்/ யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே/ ஓடிய கால்கள் ஓடவிடாமல் யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே/ ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே/ பவளக்கொடியே வா சிந்தாமணியே வா/ மணிமேகலையே வா மங்கம்மாவே வா’ என்று ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை/ ஒருவர் மடியிலே ஒருவரடி/ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி’ என்ற பாடலுக்குள் புதுசங்கதிகளை வைத்தார். ரசிக்கவைத்தார் வாலி.

’தொட்டால் பூ மலரும்/ தொடாமல் நான் மலர்ந்தேன்/ சுட்டால் பொன் சிவக்கும்/ சுடாமல் கண் சிவந்தேன்’ என்ற பாடலைப் பாடாதவர்களே இல்லை. ’கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை/ நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை/’ என்ற வரிகளில் காதலர்கள் மட்டுமல்ல... படம் பார்த்த அனைவருமே இந்தப் பாடலையும் வரிகளையும் காதலிக்கத் தொடங்கினார்கள். பாடலின் வரிகளும் அந்தக் கைத்தட்டுகிற இசையும் ரொம்பவே கவர்ந்துச்சு .

‘அழகு ஒரு ராகம்’ என்ற பாடலும் இனிமை கூட்டிச்சு . ஜெயந்திதான் பாடுவார்; ஆடுவார். ஆனால் போதையில் இருக்கும் நம்பியாருக்கு சரோஜாதேவிதான் தெரிவார். அமர்க்களமாக படமாக்கப்பட்டிருக்கும், இந்தப் பாடல்.

’அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல்/ சில சித்தாணை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல் / அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல்/ இது அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்.’ என்கிற ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ என்ற பாடலில் கவிஞர் வாலி, வளையல்களை வைத்துக் கொண்டு விளையாடியிருப்பார். 

இப்படி படத்தின் அம்புட்டுப் பாடல்களிலும் வாலி தெரிஞ்சார். தன் மொத்த திறனையும் காட்டினார். எல்லாப் பாடல்களின் எல்லா வரிகளும் அன்றைக்கு பலராலும் மனப்பாடமாகவே பாடப்பட்டுச்சு. அதனால்தான் ‘பாட்டுக்கு படகோட்டி’ என்றே கொண்டாடியது தமிழ்த்திரையுலகம். பாடல்களை டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா இருவரும் தங்கள் குரலால் அமர்க்களம் பண்ணியிருப்பாய்ங்க.

1964 தீபாவளி-நவம்பர் 3-ம் தேதி வெளியான ‘படகோட்டி’. படம் வெளியாகி,  61 வருசங்களாகி போச்சு . இன்றைக்கும் ஆந்தையார் என்ற அடைமொழி போல்   எல்லாப் பாடல்களும் இன்னிய ஜென் -க்கும் தெரியும். ‘தொட்டால் பூமலரும்’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மானால் ரீமிக்ஸ் கூட செய்யப்பட்டுச்சு.

‘படகோட்டி’ திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் ஓடுஓடென பிய்த்துக்கொண்டு ஓடிச்சு. 

’படகோட்டி’யைப் பார்க்க கடல் அலையென மக்கள் வந்துகொண்டே இருந்தாய்ங்க .

இப்பட பாடல்களை இன்னிக்கு கேட்டாலும் சிலிர்ப்பதென்னவோ நெசமா இல்லையா?