பாடகி ஜிக்கி பிறந்ததினம் இன்று!
ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகஸ்ட் 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார்.
தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்