Skip to main content

யார் வல்ளலார்? - மு.பழனிவாசன் ( பகுதி -3 )

போதனைகளும் சாதனைகளும்

இராமலிங்க சுவாமிகளின்  ஆன்மீகப்பாதை என்பது  அதுநாள்வரை யாரும் அறிந்திராதது. அவர் திருமூலரைக் கற்றுத்தேர்ந்தார். தேவாரம் திருவாசகத்தைக் கற்றுத்தேர்ந்தார். அத்தனை ஆண்டுகால ஆன்மீக நெறிமுறைகளையும், அதில் கூறப்பட்ட செய்திகளையும் நுட்பமாக அறிந்தார்.  அவற்றில் அவர் அறிந்தவைகளில் மிக முக்கியமானது, ஜோதி தரிசனம்.  அதனை தன் வாழ்நாள் மூச்சாகக்கொண்டார். பிரம்மம் அல்லது  முழுமுதற்கடவுள் என்பது ஓங்கார ஒலியுடன் கூடிய பிரகாசமான ஒளி வடிவம் என ரிக் வேதம் கூறுகிறது. இதனையே வள்ளல் பெருமானார் ஜோதி வழிபாடு என வலியுறுத்தினார்.

அவருடைய  ஆன்மீகப் பாதை கடுமையானது. ஆனால், அதில் பயணிக்க  செல்ல முடிவெடுத்து விட்டால் மிகவும் எளிது. இனிதினும் இனிது. 

கொல்லாமை, புலால் உண்ணாமை, பொய்கூறாமை, அனைத்து தீயப்பழக்க வழக்கங்களினின்றும் விலகி இருத்தல், கருணையோடிருத்தல், உருவ வழிபாட்டினைக் கை விடுதல், சாதி பேதம் மற்றும் சமய பேதம் தவிர்த்தல், அனைவரிடத்தும் அன்பும் கருணையும் கொண்டொழுகுதல்,  போன்றவை அவற்றின் முக்கிய அம்சங்களாகும். 

இறந்து போனவர்களை எரித்துவிடாமல்  சமாதி நிலையில் வைக்க வேண்டுமென தெரிவித்தார். இது பின்னாளில் உயிர்ப்பிக்கும் ஆற்றலைத் தரக்கூடுமென தெரிவித்திருக்கிறார். இதனால் அந்நாளில் அவரைப்பின்பற்றிய பலரும் வேற்றூரில் இறந்திருந்தால் கூட அவர்களை வடலூருக்கு கொண்டு வந்து புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.  

வேதங்களை அடிப்படையாகக் கொண்ட பிராமண சமூகத்தினர் கூட அவரது கூற்றினை ஏற்று அதைப் பின்பற்றியிருக்கின்றனர் என பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

இறந்தவர்கள் சம்பந்தமாக அவர்களுக்கு ”கருமாதி, திதி கொடுத்தல்” ஆகியன தேவையில்லை என்றார். இதற்கும் சில தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளையும் சந்தித்தார்.