யார் வள்ளலார்? - மு.பழனிவாசன் ( பகுதி 4 )
நற்பணி தருமசாலை:
இராமலிங்கம் சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் ஒவ்வொரு நாளும் யாவராவது ஒரு இறையடியாருக்கு அன்னமிடாமல் தனக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டாராம். அந்த அளவுக்கு தெய்வபக்தியில் சிறந்து வீலங்கியவர். அத்தகைய தாய்க்குப் பிறந்த பிள்ளையான இராமலிங்க சுவாமிகள், உலக ஜீவராசிகளின் பசிப்பிணி போக்குவதை தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருந்தார். இதனாலேயே வடலூரில் பசித்தோருக்கு அன்னதானம் செய்யும் தருமசாலையை நிறுவினார். அந்த தருமசாலையானது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும்2.5 அடி ஆழமும் உடையது.
1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதியன்று அந்த தருமசாலை அடுப்பிற்கு தன்கையால் தீ மூட்டி, மக்களுக்கு சமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இன்றுவரை அங்கு வரும் மக்களுக்காக அருளன்னத்துடன் வயிற்றுப்பசி போக்கும் அன்னமும் அன்றாடம் பரிமாறப்படுகிறது.
தரும சாலையில் ஒவ்வொரு நாளும் சமையல் முடிந்த பின்னர், மறுநாள்காலை மீண்டும் சமையல் தொடங்கும் வரையிலும், ஒரு பணியாளர் அந்தத் தீயை அணைய விடாமல் அவ்வப்போது விறகுகளை போட்டு எரித்த வண்ணம் இருப்பார்.
இதனால் இராமலிங்க சுவாமிகள் அன்று ஏற்றிய அடுப்புத் தீ இன்றுவரை அணைந்ததேயில்லை. இதனாலேயே இந்த அடுப்பு “அணையா அடுப்பு” என்னும் பெயர் பெற்றுள்ளது. அன்னதானப் பணியினை ஒரு இயக்கமாகவே மாற்றி வெற்றி கண்டவர்களில் முதன்மையானவர் இராமலிங்க சுவாமிகள்.
அக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் அடிமைப்பட்டிருந்தபோது, செயற்கையாக ஆங்காங்கு உணவுப்பஞ்சத்தை உண்டாக்கி, மக்களை தங்கள் வசமாக்கிட முயற்சித்தனர். இராமலிங்க சுவாமிகள் இதனை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், ஆன்மீக வழியில் மக்களின் பசிப்பிணி போக்க எடுத்த முயற்சியே “அன்ன தரும சாலை” என்றால் மிகையில்லை.