Image: AI Created
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சில நாட்களுக்கு முன்புதான் தங்கள் 7 வயது மகளை அருகிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற குழந்தை மாலையை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று விசாரித்த போது குழந்தை காலை பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு அருகில் உள்ள சிசிடிவி காட்சியை பார்த்தபோது குழந்தையை வேறொரு பெண் வண்டியில் ஏற்றிச் செல்வது பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வண்டியின் எண் வைத்து அந்த வண்டியின் உரிமையாளரை கண்டுபிடித்து அந்த பெண்ணை விசாரித்த போது,சிறுமி ‘லிப்ட்’ கேட்டதால் ஏற்றி சென்றதாகவும், ஆனால் எந்த பள்ளி என்று சிறுமிக்கு கூற தெரியாததால் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளிக்கு போலீசார் நேரில் சென்று பார்த்தபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் சிறுமி அமரவைக்கப்பட்டிருந்தார். உடனே குழந்தையை பத்திரமாக மீது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

