2013ம் ஆண்டு ஜூன் 15, 16ம் தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர். லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். ராணுவமும், காவல்துறையும் இணைந்து மக்களை மீட்டனர்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த வெள்ளத்தில் சுமார் 4,400 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். கேதர்நாத் சுற்றுப்பகுதியில் வசித்த உள்ளூர்வாசிகள் மட்டும் 991 பேர் பலியாகினர். இந்த பேரிடர் பகுதியில் மீட்புப் படையினர் நடத்திய தேடுதல் பணியின்போது 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், 735 சடலங்கள், உடல் பாகங்கள் மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள சிறப்பு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
மேலும், பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் 6,000க்கும் மேற்பட்டோர் தங்களின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக அளித்தனர். ஆனால், 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் உறவினர்கள் அளித்த வெறும் 33 மாதிரிகள் மட்டுமே பொருந்தின. 12 ஆண்டுகள் ஆகியும் உயிரிழந்த 702 பேர் யாரென கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

