Wednesday, February 4, 2026
Homeஆன்மீகம்"நிறங்களும் நிஜமான குணங்களும்" மு.பழனிவாசன்- சிறப்பு கட்டுரை!

“நிறங்களும் நிஜமான குணங்களும்” மு.பழனிவாசன்- சிறப்பு கட்டுரை!

சனாதன நெறியில், வைணவத்தில் “திருப்பாவை” அருளிய ஸ்ரீ ஆண்டாள் தன் பாசுரம் ஒன்றில் “செந்நெல்” பற்றி குறிப்பிட்டிருந்ததைக் குறித்து ஒரு கட்டுரையை ஏற்கனவே கண்டோம்.

இவ்வுலகில் ஒவ்வொரு திடப்பொருளும், திரவப்பொருளும் நிறங்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு நிறம் உண்டு. அவை அனைத்துமே இயற்கையானவை. அக்காலத்தில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த தமிழ்ச்சமூகம் தன் வாழ்வியல் அனுபவங்களில் நுண்ணறிவால் உணர்ந்தவற்றை, ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி தன் அன்றாட வாழ்வில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான நிறக்குறியீடுகளைத் தந்துள்ளான். அந்தந்த நிறங்களுக்குள்ள விசேஷத்தன்மையையும், அவற்றின் மூலம் நாம் பெறும் பயன்களையும் வரையறுத்துள்ளது நம் தர்மம்.

உதாரணத்திற்கு “நீலம்”. இந்த நீலவண்ணமானது வைணவ நெறியில் பாற்கடலில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் (விஷ்ணு) நிறமாக வகுத்துள்ளனர். இந்த நீலமானது பெரும்பாலும் அமைதி, நிதானம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது வானம் மற்றும் பெருங்கடல்களின் பரந்த, சுதந்திரமான தன்மையைக் குறிக்கிறது.இது சம்பிரதாயம், புத்திசாலித்தனம் மற்றும் நிலையான தன்மையைக் குறிக்கிறது. ஆன்மீக ரீதியில், இது கடவுளின் குணப்படுத்தும் சக்தியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இன்றும் நம் அறிவியல் உலகமானது, மனிதர்களின் படுக்கையறையில் நீலவண்ண ஒளிதரக்கூடிய மின்சார இரவு விளக்கை பரிந்துரைக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

அதே பெருமாளின் நிறமாக கருமை நிறத்தை அடையாளம் காட்டப்படுகிறது. இவ்வுலகின் நிறங்கள் அனைத்துமே கருமையின் கலவையால் எழுபவையே என்பதும் விஞ்ஞானத்தின் கூறு. பெருமாளைக் குறிப்பிடுகையில் கார்மேக வண்ணன், கரிய மேனியன் என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். அதனால், ”காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலா” என்றான் பாரதி. பக்திமார்க்கத்தில் இறைவனை நாம் உணர்ந்துகொள்ள ஒவ்வொரு குறியீடுகள் என்பதை சனாதனிகள் நிச்சயம் உணர்ந்து கொள்வர்.

சைவநெறியில் முழுமுதற்கடவுளான ‘சிவபெருமானை” குறிப்பிடுகையில், “பொன்னார் மேனியன்”, “செந்தழல் நாயகன்” போன்றெல்லாம் பாடுகிறோம். தங்கத்தின் பிரகாசம் என்பது புனிதத்தின் பிராவகம். நாம் வாழும் பிரபஞ்சமே பொன்னையொத்த ஒளிதரும் சூரியனால் இயங்குகிறது என்பதை நாம் அறிவோம். செம்மையான நெருப்புக்குள் அனைத்தும் அடக்கமாகும்.   இதுவும் ஞானத்திற்கான ஒருவகை குறியீடு. சிவபெருமான் லிங்கோத்பவராக (அடியும், முடியும் காணமூடியாத வகையில்) ஜோதி சொரூபமாக நின்றதாக நம் ஆன்மீக தர்மம் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய ஜோதியின் நிறமான செம்மை நிறம் ஆளுமை, தியாகம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. எந்த ஒரு திடப்பொருளும் ஜோதியின் உட்கலந்தால் மிஞ்சுவது வெறும் வெறும் சாம்பலே. இதை உணர்த்துவதற்குத்தான் சிவபெருமான் சாம்பலைப்பூசியவன் என்று கூறப்படுவதாகும். ஆக, இறுதியில் மிஞ்சுவது வெறும் சாம்பல் வண்ணமே. (இன்றைய குழந்தைகளுக்கு”சாம்பல்” நிறமென்றால் புரிவதில்லை. ஆஷ் கலர் [Ash color] என்றால்தான் புரிகிறது. நம் தமிழ் மொழியின் சொல்வளமை நம்மிடத்தில் எந்தளவிற்கு சுருங்கிப்போய்விட்டது என்பதற்கான சான்றுகளில் இதுவும் ஒன்று).

இவை மட்டுமா? ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்” என்று சொன்ன நம் முன்னோர்கள் நம் உடம்பே ஒரு கோவிலைப்போன்றது என வருணனை செய்ததுடன், அதற்கான விளக்கங்களையும் அளித்துள்ளனர். உதாரணத்திற்கு

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்க

கள்ளப் பலனைந்தும் காளாமணி விளக்கே” என்று திருமூலர் கூறுகிறார்.

            இத்தகைய நம் உடலில் ஆண்- பெண் இனச்சேர்க்கையால் வெளிப்படும் சுக்கிலம் (ஆணின் விந்து), சுரோணிதம் (பெண்ணின் உயிர்ணுக்கள்) ஆகியன பிரத்யேக நிறக்குறியீடுகளால் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தாம்பத்யக் கூடலில், ஆண் தன் உடல் சுகத்தின் உச்சநிலையில் வெளிப்படுத்துவது சுக்கிலம். இந்த சுக்கிலமானது வெண்மை (வெள்ளை) நிறம். இதேபோல் பெண்ணானவள் தன் உடல் சுகத்தின் உச்சநிலையில் வெளிப்படுத்தும் சுரோணிதம் (செம்மை நிறம்). ஒரே பிரபஞ்சத்தின் இருவேறு கூறுகள் (”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்”ஆணாகவும், பெண்ணாகவும்) உச்சநிலையில் உடலால் ஒன்றாகி, உட்கலப்பதால் சுக்கிலமாம் வெள்ளை அணுக்களும், சுரோணிதமாம் சிவப்பு அணுக்களும் கலக்கின்றன. அதில் வலுவான உயிர்க்கரு தப்பிப்பிழைத்து, பெண்ணின் கருவறையில் குடியேறி, பத்துமாதங்களில் குழந்தையாக பிறப்பெடுக்கின்றது. இதை உணர்த்தும் [அதாவது சிவமும் (வெண்மை), சக்தியும் (செம்மை) கலந்து] குறியீடே நம் திருக்கோயில்களில் காவி வண்ணமும், வெண்மை வண்ணக்கோடுகள் சரியான விகிதத்தில் சுற்றுச்சுவர்களில் பூசப்படுவதாகும். இது மட்டுமல்ல.. இது பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றல்களை மாசுமருவற்ற வகையில் நம் ஆலயங்களில், வீடுகளில் குடியேறச் செய்வதாகும்.

            இந்த உயிர் அணுக்கள் (வெள்ளை மற்றும் சிவப்பு) மனித உடலில் பின்னிப்பிணைந்திருக்கின்றன. இப்படி பின்னிப்பிணைந்திருப்பதை மருத்துவ உலகம் இன்று தன் லோகோவாக (இலட்சினையாக) ஏற்றுள்ளது. ஆனால், இதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னரே நம் பாரத தேசத்தின் சனாதனம், கோவில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்திருப்பதைப்போன்று சிலைகளாக வடித்து, மனிதர்கள் அவற்றை வழிபடச் செய்து, அவரவர் உடல், ஆன்ம ஆரோக்கியத்தைப் பெருக்க வழிவகை செய்தனர். இப்படி சிலைகளுக்குள், ஆலயங்களுக்குள், நிறங்களுக்குள் பிரபஞ்ச ஆற்றலைக் குவித்தனர் நம் முன்னோர்கள். திருப்பாவை அருளிய ஸ்ரீ ஆண்டாள் தன் பாசுரத்தில், ஓரிடத்தில் ”செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்” என்று குறிப்பிடுகிறாள்.

அதற்கு என்ன விளக்கம்?

அதாவது, வெண்பற்கள் கொண்டு, செங்கல் பொடியின் நிறத்தினாலான ஆடையை அணிந்து, தவமியற்றக்கூடிய தவசீலர்கள், திருக்கோயிலில் பள்ளியெழுச்சி பாடும்விதமாக சங்கினை ஊதுவதற்காக பெருமாளின் திருக்கோயிலுக்கு போயிருக்கின்றனர்” என்று தன் தோழி ஒருவளின் வீட்டு வாயிலில் ஸ்ரீ ஆண்டாள் பாடுகிறாள். ஆக, இதன் மூலம், அக்காலத்தில் ஆன்மீக ரீதியாக துறவறம் மற்றும் ஆன்மீகநெறியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட சீலர்கள் செங்கல் பொடியின் நிறத்தைக்கொண்ட ஆடையினை (காவி நிறத்திலான) ஆடையினை உடுத்தி வாழ்ந்தனர் என்பது ஸ்ரீ ஆண்டாளின் பாடல் வரிகள் மூலம் தெரிய வருகிறது.  இது ஆண்டாள் காலத்தின் சமூக நிலவரங்களை தற்காலத்தில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்ற காலக்கண்ணாடி என்றால் மிகையில்லை.

தற்காலத்தில் காவி நிறமானது கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியிருந்தாலும், தொன்று தொட்டு புனிதமாகவும், அர்ப்பணிப்பிற்கும், தியாகத்திற்கும் உரிய குறியீடாக இருந்து வருகிறது என்பதே உண்மை. உலகின் ஒவ்வொரு மதங்களும், ஒவ்வொரு நிறத்தை தங்கள் குறியீடாகவே கொண்டுள்ளன. அவை ஒன்றிற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். தன் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு தன்மைக்கும் ஆனால், பொருள் பொதிந்திருக்கும் காரணங்களை பாரத தேசத்தின் சனாதன தர்மம் தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதை மறக்கவோ, மறைக்கவோ இயலாது.

சனாதனத்தின் பெருமைகளும், ஸ்ரீ ஆண்டாளின் கருணையும் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஆட்கொள்ள பரந்தாமன் பேரரருள் பொழியட்டும். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments