செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபல நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ‘குரல் நகல்’ (Voice-cloning) மோசடிகள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனங்களான ‘சிட்டாடல்’ (Citadel), ‘டூ சிக்மா’ (Two Sigma), ‘பாயிண்ட்72’ (Point72) மற்றும் ‘மில்லினியம் மேனேஜ்மென்ட்’ ஆகியவை இத்தகைய ஏஐ அடிப்படையிலான ‘வாய்ஸ் ஃபிஷிங்’ (Vishing) தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
ஹேக்கர்கள் மிகச் சிறிய அளவிலான குரல் பதிவுகளைக் கொண்டு, அந்நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் குரல்களைத் தத்ரூபமாக ஏஐ மூலம் போலி செய்து, தொலைபேசி வாயிலாகப் பேசி நிறுவனங்களின் உள் தகவல்களையும் ரகசிய அமைப்புகளுக்கான அணுகல் அனுமதியையும் பெற முயன்றுள்ளனர்.
எனினும், இந்த ஊடுருவல் முயற்சிகள் கண்டறியப்பட்டுத் தடுக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களின் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிக எளிதாகவும் வேகமாகவும் இத்தகைய குரல் போலி மோசடிகளை நடத்த முடியும் என்பதால், நிதித் துறை நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
