Friday, September 18, 2026
Homeசெய்திகள்மேகதாது விவகாரத்தில் முதல்வரின் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு!

மேகதாது விவகாரத்தில் முதல்வரின் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மீது அவையில் உரையாற்றிய அவர், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பதற்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே மிக உறுதியாக எடுக்கப்பட்டன என்பதை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், கடந்த 2014 டிசம்பர் 5 அன்று தமிழக பேரவையில் இதற்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், அதன் தொடர்ச்சியாக 2015 மார்ச்சில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து ஜெயலலிதாவின் கடிதத்தை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும், 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்தபோதெல்லாம் மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததோடு, 110 விதியின் கீழ் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனச் சபையில் முழங்கினார் என்றும், தான் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் பிரதமருக்கு நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பல மாநிலங்கள் வழியாகப் பாயும் நதிகள் தேசிய சொத்து என்பதால் எந்தவொரு தனி மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை மேற்கோள் காட்டியதோடு, கீழ் படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேல் படுகை மாநிலமான கர்நாடகா எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்ற தெளிவான சட்ட விதியைச் சுட்டிக்காட்டினார்.

கர்நாடக அரசு மேகதாது அணையைத் தன்னிச்சையாகக் கட்டினால் அது தமிழகத்தின் காவிரிப் படுகையைப் பாலைவனமாக்கி, ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரத்தையும் முற்றிலும் பறித்துவிடும் என எச்சரித்த அவர், இரு மாநில நல்லுறவைச் சீர்குலைக்கும் கர்நாடகாவின் இந்த தன்னிச்சையான நிதி ஒதுக்கீடும், இந்த மாதமே மத்திய அரசிடம் திருத்திய தொழில்நுட்பத் திட்ட அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்பதால், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முதல்வர் கொண்டு வந்துள்ள இந்தத் தனித்தீர்மானத்தை அதிமுக மனப்பூர்வமாக ஆதரிப்பதாகத் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments