தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவை மீறி ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அக்கட்சியின் அதிருப்தித் தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் நோக்கில், அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களைக் கூட்டுவதற்காக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் தீவிரமாகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தன்னைச் சந்திக்க வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம், “எந்தவொரு வெற்றுப் பேப்பரிலோ அல்லது பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான கடிதத்திலோ அவசரப்பட்டு யாரும் கையெழுத்திட வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி கறாராக அறிவுறுத்தி வருவதோடு, கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் வருவதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

