கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்கள் அனுஷ்டிப்பார்கள். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதமானது கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி வரும் தீபாவளி நாளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.
யமத் துவிதியை ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.
