ஆண், பெண் என இருவருமே திருமண பந்தத்திற்குள் நுழையும் பொழுது பல எதிர்பார்ப்புகளுடன் நுழைவது உண்டு. அதிலும் பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, புழுத வீட்டிற்கு செல்லும் பொழுது தங்களுக்கு ஏற்ற அரவணைப்பு, ஆதரவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுண்டு. புகுந்த வீட்டில் மற்றவர்கள் என்ன சொன்னாலும் தன்னை விட்டுக் கொடுக்காத கணவன் வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு முன்பு இருந்தே யோசிக்க தொடங்கி விடுவார்கள். அதேபோல் திருமணத்திற்கு பிறகும் என்னென்ன விஷயங்கள் செய்தால் மனைவிக்கு உங்கள் மேல் பாசம், காதல் அதிகமாகும் என்று பார்ப்போமா?
பொறுப்பாக இருப்பது:
அதாவது திருமணத்திற்கு முன்பு சில ஆண்கள் எடுக்கும் பொருளை அப்படியே போட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அப்படி செய்தால் மனைவிக்கு பிடிப்பதில்லை. அது மட்டும் இல்லாமல் சின்ன சின்ன அடிப்படை விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உதாரணத்திற்கு வண்டி சாவி, கை கடிகாரம், சாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் மனைவியிடம் கேட்காமல் பொறுப்பாக இருந்தால் மனைவி உங்களை நேசிப்பார்.
தேவையில்லாமல் நேரத்தை செலவிடுவது:
திருமணத்திற்கு முன்பு விளையாட்டு, வீடியோ கேம், கம்ப்யூட்டர் கேம் என்று இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பற்றியும், மனைவியை பற்றியும் சிறிது நேரம் யோசித்து செயல்பட வேண்டும். அதிக நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி என்று அமர்ந்து இல்லாமல் மனைவியிடம் கவனம் செலுத்த தொடங்க வேண்டும். சிறிது நேரம் கிடைத்தாலும் மனைவியிடம் தங்களது வாழ்க்கை பற்றி உரையாட வேண்டும். இப்படி செய்தால் மனைவிக்கு பாசம் அதிகரிக்குமாம்.
நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது:
ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் பெரும்பாலான விடுமுறை நாட்களை நண்பர்களுடன் செலவழிப்பது மனைவிக்கு பொறாமையையும், விரக்தியையும் கொடுக்கும். எனவே திருமணத்திற்கு பிறகு நண்பர்களுக்கு என்று ஒரு தனி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தூய்மையில் கவனம்:
சின்ன சின்ன தூய்மையான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அதாவது அழுக்கு சட்டைகளை தகுந்த இடத்தில் போடுவது, படுக்கையில் ஈர துண்டுகளை போடாமல் இருப்பது, எடுக்கும் பொருளை எடுக்கும் இடத்தில் வைப்பது என்று சின்ன சின்ன தூய்மையான விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உதவ வேண்டும்:
மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் சமையல் வேலைகளிலும், வீட்டு வேலைகளிலும், ஆண்கள் பங்கு ஏற்க வேண்டும். இது பெண்கள் செய்யும் வேலை, ஆண்கள் செய்யும் வேலை என்று பிரித்துப் பார்க்காமல் ஒற்றுமையுடன் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும். அனைத்து வேலைகளிலும் பங்கு போட்டு செய்தால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்குமாம்.
மரியாதை கொடுப்பது:
இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் மரியாதை கொடுப்பது. பெண்களை எந்த நேரமும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தவறு செய்திருந்தாலும் அனைவரின் முன்னிலையில் அதை சுட்டிக் காட்டாமல் தனியாக சுட்டிக்காட்டி விளக்குவது சண்டையை குறைக்கும். இப்படி அடிப்படையான சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் உங்கள் வாழ்க்கை சொர்க்கம் தான்.

